தூத்துக்குடியில் பிரபல ரவுடி ‘துப்பாக்கி செல்வம்’ படுகொலை! போலீசார் விசாரணை! - Seithipunal
Seithipunal


கூடங்குளம் அருகே தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடி ‘துப்பாக்கி செல்வம்’ நள்ளிரவில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்த செல்வ முருகன் என்ற செல்வம் (41), தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் 6 கொலை வழக்குகள் உள்ளிட்ட 27 வழக்குகளில் தொடர்புடையவர் என போலீசார் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி காவல்துறையின் ஏ பிளஸ் ரவுடிகள் பட்டியலிலும் அவர் இடம்பெற்றிருந்தார். நாகர்கோவிலில் நடைபெற்ற கொலை சம்பவம் ஒன்றில் நாட்டுத் துப்பாக்கியை பயன்படுத்தியதால் அவருக்கு ‘துப்பாக்கி செல்வம்’ என்ற பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

செல்வத்துக்கு தூத்துக்குடியில் எதிரிகளால் அச்சுறுத்தல் இருந்ததால், அங்கு தங்க வேண்டாம் என போலீசார் ஏற்கனவே எச்சரித்திருந்தனர். இதையடுத்து அவர் தனது மனைவியுடன் கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே கரும்பாட்டூர் பகுதியில் வசித்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, தனது தாயாரின் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே ஈத்தங்காடு பகுதிக்கு சென்று அங்கு வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சம்பவத்துக்கு முந்தைய நாள் மாலை சங்கநேரியில் உள்ள தனது தாயாருக்குச் சொந்தமான தோட்டத்துக்குச் சென்று வருவதாகக் கூறிவிட்டு செல்வம் சென்றுள்ளார். அங்கு தனது நண்பருடன் தங்கியிருந்த அவர், இரவு நண்பருடன் மதுபானம் அருந்திவிட்டு தோட்டத்திலேயே தூங்கியதாக தெரிகிறது.

நேற்று காலை, அருகில் உள்ள தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் செல்வம் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பாலசுப்பிரமணிய சாஸ்திரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது, நள்ளிரவில் இரண்டு பேர் மட்டுமே அந்த தோட்டத்துக்குச் சென்றது தெரியவந்ததாக கூறப்படுகிறது. மேலும், செல்வத்துடன் தங்கியிருந்த அவரது நண்பரின் செல்போனுக்கு போலீசார் தொடர்புகொண்டபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை.

இதனால், மதுபோதையில் செல்வத்துக்கும் அவரது நண்பருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதா அல்லது வேறு நபர்கள் தோட்டத்துக்குள் புகுந்து செல்வத்தை கொலை செய்தார்களா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையின் பின்னணி மற்றும் குற்றவாளிகளை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Notorious gangster Thuppakki Selvam murdered in Thoothukudi Police investigating


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




சினிமா

Seithipunal
--> -->