தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்! அவசர ஆலோசனையில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்!
Northeast monsoon MK Stalin TN Govt red alert
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் மழை பாதிப்புகளைத் தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மழை மிகுந்து பெய்துள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாகவும், முக்கிய துறைச் செயலாளர்களுடனும் முதலமைச்சர் நேரடியாக ஆலோசனை நடத்தினார்.
மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம், ஆற்றங்கரைகளில் நீர்மட்ட உயர்வு, போக்குவரத்து தடைகள் போன்ற சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தார். மேலும், ஆபத்தான பகுதிகளில் மக்கள் பாதுகாப்பாக மாற்றப்பட வேண்டும் என்பதற்கான பணிகள் உடனடியாக தொடங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதேபோல், மழை மேலும் தீவிரமடைந்தாலும் அதனை சமாளிக்க அனைத்து துறைகளும் முழுமையான தயாரிப்புடன் இருக்க வேண்டும் என்றும், அவசரநிலை ஏற்படும் இடங்களில் விரைவான மீட்புப் படைகள் மற்றும் உதவி முகாம்களை அமைக்க உத்தரவிட்டார்.
மழை பாதிப்புகள் குறித்து துல்லியமான தகவல்களை சேகரித்து, மக்கள் எச்சரிக்கைகளை உடனுக்குடன் வெளியிட வேண்டும் என்றும், மின்சாரம், குடிநீர், சுகாதாரம், போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படாதவாறு சிறப்பு கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் கூறினார்.
இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர், பேரிடர் மேலாண்மை ஆணையர், பொது நிர்வாகம், நீர்வளத்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு மழைநீர் மேலாண்மை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர்.
இதற்கிடையே, இன்று விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிக அதிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நாளை (22ஆம் தேதி) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இம்மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தொடரப்படுவதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Northeast monsoon MK Stalin TN Govt red alert