வாக்கு எண்ணிக்கை மையங்களில் புதிய பாதுகாப்பு நடைமுறை! இந்தியாவிலேயே முதல் முறை! தேர்தல் ஆணையம் வைத்த ‘செக்!
New security measures at counting centres First in India Election Commission sets up checks
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்த இந்தியத் தேர்தல் ஆணையம் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் அனுமதியில்லாத நபர்கள் நுழைவதைத் தடுக்கும் வகையில், QR குறியீடு அடிப்படையிலான புகைப்பட அடையாள அட்டை முறை அமல்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. அதன் வாக்குகள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 மையங்களில் எண்ணப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடனும் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனையின் பின்னர் வெளியிடப்பட்ட அறிவிப்பில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூன்று அடுக்குகளாக மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் மற்றும் இரண்டாம் பாதுகாப்பு வளையங்களில், தேர்தல் நடத்தும் அலுவலர் (RO) வழங்கிய புகைப்பட அடையாள அட்டைகள் நேரடியாகச் சரிபார்க்கப்படும். அதன்பிறகு, வாக்கு எண்ணிக்கை அறைக்கு அருகிலுள்ள உள் பாதுகாப்பு வளையத்தில் QR குறியீடு ஸ்கேன் செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்ட பின்னரே உள்ளே அனுமதி வழங்கப்படும்.
இந்த புதிய அடையாள அட்டை முறை தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இதில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்கு எண்ணிக்கை பணியாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள், வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆகியோர் அடங்குவர்.
அதேபோல் ஊடக பிரதிநிதிகளுக்காக ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் தனி ஊடக மையம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் வழங்கிய அதிகாரப்பூர்வ அனுமதி ஆவணங்களின் அடிப்படையில் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
இந்த QR அடிப்படையிலான பாதுகாப்பு நடைமுறை தமிழ்நாடு மட்டுமல்லாமல் அசாம், கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் நடைபெறும் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையிலும் அமல்படுத்தப்பட உள்ளது. மேலும் எதிர்கால மக்களவை மற்றும் மாநிலத் தேர்தல்களிலும் இதே முறை தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை தேர்தல் செயல்முறையின் பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை மேலும் உயர்த்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை நாளில் எந்தவித குழப்பமும் ஏற்படாமல் இருக்க மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் மே 4ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை, அதிக பாதுகாப்புடனும் கட்டுப்பாடுடனும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.
English Summary
New security measures at counting centres First in India Election Commission sets up checks