வெற்று விளம்பரங்களுக்கு மட்டுமே திமுக முக்கியத்துவம் தரும் - தமிழக பாஜக தலைவர்.!!
nainar nagendran speech about dmk govt for anganwadi issue
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களை மூடுவதாக வந்த செய்திக்கு பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:-
"தமிழகத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவதாக வந்துள்ள செய்தி, கடும் கண்டனத்திற்குரியது. ஏழைக் குழந்தைகளின் ஊட்டச்சத்தையும், ஆரம்பகால வளர்ச்சியையும் கேள்விக்குறியாக்கும் இந்தச் செயல், திமுக அரசின் நிர்வாகத் திறனின்மையைக் கோடிட்டு காட்டுகிறது.
திமுக அரசு தங்கள் அற்ப அரசியல் வீம்புக்காக நிராகரித்து வரும் தேசிய கல்விக் கொள்கையில், அங்கன்வாடி பணியாளர்களுக்கு முன்னிலை வழங்கவும், கல்வி மற்றும் சிறுவர் பராமரிப்புத் துறையில் பயிற்சி அளித்து அங்கன்வாடி மையங்களைத் தொடக்கப் பள்ளி போலவே மாற்றி அமைப்பதற்கான முன்னோடியான முயற்சியும் வகுக்கப்பட்டுள்ளது.

ஆனால், வெற்று விளம்பரங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் திமுக அரசு, அங்கன்வாடி ஊழியர்கள் பற்றாக்குறையைச் சரி செய்ய முடியாமல் அங்கன்வாடி மையங்களையே மூடுவதற்கு தயாராகி வருகிறது.கடந்த 2021 தேர்தலின்போது திமுக அரசு "சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசு பணியாளர்களாகப் பணியமர்த்தி காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்டவை வழங்கப்படும்" என்று வாக்குறுதி தந்தது.
ஆனால், ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் ஆகியும் அது கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆகவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கன்வாடி பணியாளர்களுக்காக கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமெனவும், ஏழைக் குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளின் ஆரம்பக் கல்வியும் வளர்ச்சியும் பாதிக்காத வகையில் அங்கன்வாடி மையங்களை மூடுவதைத் தவிர்த்து அவற்றைச் செவ்வனே நடத்திடவும் வலியுறுத்துகிறேன்" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
nainar nagendran speech about dmk govt for anganwadi issue