இந்து கோவிலுக்கு சீர் வரிசையுடன் வந்த முஸ்லிம்கள் - பழனி அருகே நெகிழ்ச்சி சம்பவம்.!
muslims provide immersion to hindhu temple near palani
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பெரியகலையம்புத்தூரில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என்று அனைத்து மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இந்த ஊரில் பிரசித்தி பெற்ற ஐகோர்ட்டு பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புனரமைப்பு பணி தொடங்கியது.
தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்ததையடுத்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் பழனி, நெய்க்காரப்பட்டி, பாப்பம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அந்த வகையில் பெரியகலையம்புத்தூர் ஜமாத் சார்பில், அங்கு வாழும் முஸ்லிம்கள் ஐகோர்ட்டு பத்ரகாளியம்மன் கோவிலுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி மதநல்லிணக்கத்தை பறை சாற்றினர். இதேபோல், பெரியகலையம்புத்தூர் பள்ளிவாசலில் இருந்து வெற்றிலை, பாக்கு, பழங்கள், இனிப்பு, ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை தாம்பூலத்திலும், ஒரு பீரோவை ஆட்டோவிலும் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
அவர்களுக்கு, கோவில் நிர்வாகிகள் சார்பில் பொன்னாடை அணிவித்து வரவேற்றபு அளிக்கப்பட்டதைத்தொடர்ந்து முஸ்லிம்கள் கோவிலுக்குச் சென்று சீர்வரிசை பொருட்களை வழங்கினர். பின்னர் அங்கு நடந்த சிறப்பு பூஜையில் அனைவரும் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து முஸ்லிம்கள் தெரிவித்ததாவது, 'எங்கள் ஊரில் இந்து-முஸ்லிம் என்ற பாகுபாடு கிடையாது. அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். பள்ளிவாசலில் ஏதும் நிகழ்ச்சி என்றால் இந்துக்களுக்கு முறைப்படி அழைப்பு கொடுப்போம். அவர்களும் வந்து கலந்து கொள்வார்கள். அதன்படி கோவில் கும்பாபிஷேகத்துக்கு இந்துக்கள் சார்பில் எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் படி ஜமாத் சார்பில், நாங்கள் சீர்வரிசை பொருட்களை வழங்கி கலந்து கொண்டோம்' என்றுத் தெரிவித்தனர்.
English Summary
muslims provide immersion to hindhu temple near palani