நாமக்கலில் திரைப்பட பாணியில் நடந்த திருமணம்...! ஆத்திரத்தில் தந்தை...! நடந்து என்ன?
movie style wedding Namakkal Father rage What happened
நாமக்கலில் ராசிபுரம் அருகே கோனேரிப்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் 26 வயதான அஜய் என்பவர் தொழில்நுட்பத்தில் திகழும் இளம் என்ஜினீயர். இவரது உறவினரான ஏ.எஸ்.பேட்டை பகுதியைச் சேர்ந்த தண்டபாணியின் மகள் நந்தினி (21), எஞ்சினீயரிங் மாணவி. இவர்கள் இருவருக்கும் பல வருடங்களாக காதல் மலர்ந்திருந்தது.
ஆனால் இந்தக் காதலுக்கு நந்தினியின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் எந்த விதத்திலும் ஒன்றாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். மேலும், திருமணம் செய்வதே ஒரே வழி என்று உறுதியடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் நேற்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற நந்தினி, மாலை நேரத்தில் பேருந்தில் நாமக்கல் வந்து இறங்கினார்.

அப்போது, சேலம் சாலை சந்திப்பில் காத்திருந்த அஜய், அவரது உறவினர்கள் யுவராஜ், ஜெயலட்சுமி உட்பட நால்வரின் காரில் அவர் ஏறினார்.அந்த நேரத்தில் மகளை அழைத்துச் செல்ல வந்த தந்தை தண்டபாணி, கண் முன்னே மகள் காதலனின் காரில் ஏறுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் கோபத்தின் உச்சத்தில் ஓடிவந்து அஜய் மற்றும் உறவினர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அத்துடன், தனது உறவினர்களையும் அழைத்து சம்பவ இடத்திற்கு வரவழைத்தார்.இந்த பரபரப்பான சூழ்நிலையில், அஜய் தனது பையில் இருந்த தாலியை நந்தினியின் கழுத்தில் கட்டியதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், அவர்கள் இருவரும் காருக்குள் மோதிரம் மாற்றிக்கொண்டனர்.
இதில் மகளின் கழுத்தில் காதலன் தாலி கட்டியதை கண்டு அதிர்ச்சியும், ஆத்திரமுமடைந்த தந்தை தண்டபாணி மற்றும் உறவினர்கள், காரின் கண்ணாடிகளை உடைத்து, அஜய் மற்றும் அவருடன் இருந்தவர்களை தாக்கினர். இதனால் சில நிமிடங்களில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போக்குவரத்து காவலர்கள் விரைந்து வந்து, பொதுமக்களின் உதவியுடன் அஜய், நந்தினி உள்ளிட்ட ஐந்து பேரையும் மீட்டு, நாமக்கல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.அங்கு இன்ஸ்பெக்டர் கபிலன் தலைமையில் விசாரணை நடைபெற்றது.
அதில், “நான் விருப்பத்துடன் அஜய்யை திருமணம் செய்துகொண்டேன்” என்று நந்தினி வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, இருதரப்பினரையும் காவலர்கள் சமரசம் செய்து அனுப்பிவைத்தனர்.
English Summary
movie style wedding Namakkal Father rage What happened