பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை..பல்வேறு இடங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பிரதாப்!
Monsoon precautionary measures District Collector Prathap inspects various locations
திருவேற்காடு மற்றும் திருநின்றவூர் ஆகிய பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களை மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட, வேலப்பன்சாவடி நூம்பல் பிரதான சாலையில் நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரூ.1.80 கோடி மதிப்பீட்டிலும், சுந்தரசோழபுரம் ஏழுமலை நகர் தாழாங்குளம் அருகில் ரூ.23 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக முடிக்க சம்பந்தப்பட்ட நகராட்சி அலுவலர்களை அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து திருநின்றவூர் நகராட்சிக்குட்பட்ட, ஈசா ஏரியில் பொதுப்பணித்துறை சார்பாக பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரூ.9.3 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகளையும் பெரியார் நகர் பகுதியில் நகராட்சி நிர்வாகத்துறை சார்பாக பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நீர் பொறி அறை (பம்ப் ரூம்) அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தினார்.
வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு தண்ணீர் தேங்காமல் தடுக்க அனைத்து வித இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இதில் திருவேற்காடு நகர மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி, நகராட்சி ஆணையர் பே.ராமர், பூவிருந்தவல்லி வட்டாட்சியர் உதயம், திருநின்றவூர் நகர மன்ற தலைவர் உஷா ரவி, நகராட்சி ஆணையர் ஜீவிதா, நகராட்சி பொறியாளர் குமார், ஆவடி வட்டாட்சியர் கண்ணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
English Summary
Monsoon precautionary measures District Collector Prathap inspects various locations