விலை பட்டியலில் போட்டியிடும் பால் நிறுவனங்கள் !! 
                                    
                                    
                                   Milk companies competing in the price list
 
                                 
                               
                                
                                      
                                            தமிழ்நாட்டின் முன்னணி பால் நிறுவனமான ஆரோக்கியா, தனது முழு கிரீம் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்துள்ளது. தனது மற்ற தயாரிப்பான, தயிர் விலையும் கிலோவுக்கு ரூ.6 குறைக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியா நிறுவனம் இவ்வாறு விலை குறைத்த போதிலும், தனியார் பிராண்டுகள் மற்றும் அமுல் போன்ற பால் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், அரசுக்கு சொந்தமான ஆவின் இன்னும் மலிவான விலையில் பால் பொருட்களை விற்பனை செய்கிறது.
ஆரோக்கியா நிறுவனதின் இந்த விலை திருத்தத்திற்குப் பிறகு, புல் க்ரீம் பால் இப்போது லிட்டருக்கு ரூ. 65 ஆகவும், ஆவின் 6% கொழுப்பிற்கு இணையான விலை ரூ. 60 ஆகவும் உள்ளது. ஆவின் பால் கார்டுதாரர்கள் லிட்டருக்கு ரூ.48-க்கு  புல் க்ரீம் பால் பெறுகிறார்கள். மேலும், அமுலின் புல் க்ரீம் பால் விலை லிட்டருக்கு ரூ. 64என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பருவ மாற்றம் காரணமாக பால் உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் விற்பனையில் ஏற்பட்ட சரிவு காரணமாக, தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 4 முதல் 5 ரூபாய் வரை குறைத்துள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் லஸ்ஸி, தயிர், மோர் மற்றும் பிற பொருட்களின் நுகர்வு கணிசமாகக் குறைந்துள்ளது, இதனால் நிறுவனங்கள் விலையை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அதிகாரி தெரிவித்தார்.
ஆரோக்யா நிறுவனத்தின் உரிமையாளரான ஹாட்சன் அக்ரோ புராடக்ட்ஸ் நிறுவனம், கடந்த ஜூன் 17ஆம் தேதி முதல் லிட்டருக்கு ரூ.2 குறைத்து, அதன் அதிகாரப்பூர்வ விலைப்பட்டியலின்படி திங்களன்று ரூ.1 கூடுதல் குறைப்பை அமல்படுத்தியது. 

அந்த நிறுவனத்தின் இரண்டு லிட்டர் பால் பாக்கெட்டின் விலை ரூ.134ல் இருந்து ரூ.128 ஆகவும், 500 கிராம் தயிர் பாக்கெட் விலை ரூ.40ல் இருந்து ரூ.37 ஆகவும் குறைந்துள்ளது.ஆவின் 500 கிராம் தயிர் பாக்கெட்டின் விலை ரூ.35 ஆகவும் குறைந்துள்ளது.
தமிழகத்தில் ஒரு நாளைக்கு 2.2 கோடி லிட்டராக பால் தேவை உள்ளது. ஆவின் பால் உற்பத்தித் துறையில் சுமார் 17-18% சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது, மேலும் மற்ற ஆறு முதல் எட்டு தனியார் பிராண்டுகள் சுமார் 80 முதல் 82% வரை உள்ளன.
ஆவின் நிறுவனத்திற்கு பால் சப்ளை செய்யும் பால் சப்ளையர்கள் பசும்பால் ஒரு லிட்டருக்கு ரூ.35 மற்றும் எருமைப்பாலுக்கு ரூ.44 என்ற கொள்முதல் விலையின் கீழ் செயல்படுகின்றனர், கடந்த டிசம்பர் 2023 முதல் லிட்டருக்கு ரூ.3 ஊக்கத்தொகை கூடுதலாக வழங்கப்படுகிறது. ஆனால், தனியார் நிறுவனங்கள் கொள்முதல் விலை ரூ.43-46 சப்ளையர்களுக்கு கொடுக்கப்படுகிறது.
 
                                     
                                 
                   
                       English Summary
                       Milk companies competing in the price list