ரேஷன் பருப்பு கொள்முதலில் மாஸ் சேமிப்பு...! ரூ.187 கோடியை மிச்சப்படுத்தி தவெக அரசு அதிரடி...!
Mass savings ration dal procurement Government takes action to save 187 crore
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டு வரும் துவரம் பருப்பை, முந்தைய காலகட்டத்தைவிட கணிசமாக குறைந்த விலையில் கொள்முதல் செய்ததன் மூலம் ரூ.187 கோடி செலவினம் குறைக்கப்பட்டுள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் வழியாக அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுடன் துவரம் பருப்பும் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு தேவையான அளவு துவரம் பருப்பை கொள்முதல் செய்து, நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பி வருகிறது.

இந்த நிலையில், கடந்த 3 மாதங்களில் துவரம் பருப்பை குறைந்த விலையில் கொள்முதல் செய்ததன் மூலம் அரசுக்கு ரூ.187 கோடி அளவுக்கு செலவு குறைந்துள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.109.15 என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தவெக ஆட்சியில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.77.89-க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.இதன்படி, முந்தைய கொள்முதல் விலையுடன் ஒப்பிடும்போது ஒரு கிலோவுக்கு ரூ.31-க்கும் அதிகமாக விலை குறைந்துள்ளது. பெருமளவில் கொள்முதல் செய்யப்படும் நிலையில், இந்த விலை வேறுபாடு அரசின் மொத்த செலவில் கணிசமான சேமிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் துவரம் பருப்பு கொள்முதலுக்காக ரூ.654 கோடி செலவிடப்பட்டதாகவும், தற்போதைய ஆட்சியில் அதே காலகட்டத்தில் ரூ.467 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாகவும் குடிமைப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.இதன் மூலம் துவரம் பருப்பு கொள்முதலுக்கான செலவில் ரூ.187 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு தடையின்றி துவரம் பருப்பு வழங்குவதற்காக மொத்தம் 60 ஆயிரம் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கொள்முதல் விலை குறைக்கப்பட்டிருந்தாலும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் துவரம் பருப்பின் தரத்தில் எந்தவித சமரசமும் செய்யப்படவில்லை என்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை தெளிவுபடுத்தியுள்ளது. விலை குறைப்புடன் தரத்தையும் உறுதி செய்து, அரசின் செலவினத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Mass savings ration dal procurement Government takes action to save 187 crore