'மன்பகதூர் சிங் லஹக்' விருது; தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு அறிவிப்பு..!
Manpakhadur Singh Lahak Award announced for Tamil writer Perumal Murugan
இந்திய மொழி ஒற்றுமை மன்றத்தின் கூட்டு ஆதரவோடு, நடப்பு ஆண்டிற்கான புகழ்பெற்ற 'மன்பகதூர் சிங் லஹக் (சம்மான்) விருது தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு வழங்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மன்பகதூர் சிங் லஹக் சம்மான் குழுவின் செயலாளர் நிர்பய் தேவ்யான்ஷ், வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
கிராமப்புற தமிழ்நாட்டின் வாழ்வியலையும், சாதிய மற்றும் சமூக அழுத்தங்களையும் தனது ஆழமான எழுத்துகளால் உலக அரங்கில் பதிவு செய்ததற்காக பெருமாள் முருகனுக்கு இந்த கௌரவம் வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
பெருமாள் முருகன்
கடந்த 1966-இல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று, பல்வேறு அரசு கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவர் கொங்கு நாட்டின் நாட்டுப்புறக் கலைகள் மற்றும் கலாச்சாரம் குறித்துப் பரந்துபட்ட ஆய்வுகளைச் மேற்கொண்டவர்.
இவரது புகழ்பெற்ற படைப்புகளான 'மாதொருபாகன்' மற்றும் 'பூக்குழி' ஆகியவை சர்வதேச அளவில் புக்கர் பரிசு மற்றும் சாகித்ய அகாதெமி மொழிபெயர்ப்பு விருதுகளைப் பெற்றுள்ளன.

அத்துடன், கடந்த 2015-இல் எழுந்த கடுமையான கருத்துச் சுதந்திரப் போராட்டங்களை நீதிமன்றத்தின் துணையோடு வென்று, தொடர்ந்து எழுதி வரும் இவரது படைப்புகளை, அமெரிக்காவில் வாழும் 88 வயது மூத்த மொழிபெயர்ப்பாளர் மோகன் வர்மா தொடர்ச்சியாக இந்தியில் மொழிபெயர்த்து வருகிறார்.
இந்நிலையில், இந்த உயரிய 'மன்பகதூர் சிங் லஹக் (சம்மான்) விருது வழங்கும் விழா இந்தாண்டு நவம்பரில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாக மன்பகதூர் சிங் லஹக் சம்மான் குழு தெரிவித்துள்ளது.
English Summary
Manpakhadur Singh Lahak Award announced for Tamil writer Perumal Murugan