மயக்க ஊசி செலுத்தி மனைவியை கொன்ற கணவன் .. சிக்கியது எப்படி?
Man kills wife by injecting her with anesthesia How did you get caught?
6 மாதங்களுக்கு முன்பு மயக்க ஊசி செலுத்தி மனைவியை கொலை செய்த வழக்கில் டாக்டர் சிக்கியது எப்படி என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு மாரத்தஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த கிருத்திகா ரெட்டிக்கும், மகேந்திர ரெட்டிக்கும் கடந்த ஆண்டு மே மாதம் 6-ந் தேதி திருமணம் நடைபெற்றது. பெங்களூருவில் இந்த தம்பதி வசித்து வந்தனர்.
மகேந்திர ரெட்டி, பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறார். அதே ஆஸ்பத்திரியில் தான் கிருத்திகா ரெட்டியும் டாக்டராக பணியாற்றினார். இதற்கிடையில், உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு இருந்த கிருத்திகா ரெட்டி கடந்த ஏப்ரல் மாதம் அய்யப்பா லே-அவுட்டில் உள்ள தனது தந்தையின் வீட்டுக்கு வந்திருந்தார்.
ஏப்ரல் மாதம் 23-ந் தேதி இரவு மகேந்திர ரெட்டியும், கிருத்திகா ரெட்டியும் ஒன்றாக இருந்தபோது திடீரென்று கிருத்திகா ரெட்டி கூச்சலிட்டபடி மயக்கம் அடைந்தார். உடனடியாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அவர் கொண்டு செல்லப்பட்டபோது அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர்.
அப்போது கிருத்திகா ரெட்டி குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் அஜீரண கோளாறு, வாயு தொல்லை உள்ளிட்ட காரணங்களால் அவதிப்பட்டு வந்ததாகவும், இதனால்தான் கிருத்திகா ரெட்டி உடல் நலக்குறைவால் தான் உயிரிழந்திருப்பதாக குடும்பத்தினர் நம்பினார்கள். மேலும் போலீசில் புகார் அளிக்கவும் முன்வரவில்லை.
இதையடுத்து மாரத்தஹள்ளி போலீசார் வலியுறுத்தலின்பேரில் கிருத்திகா ரெட்டியின் அக்காள் நிகிதா புகார் அளித்தார். இந்த நிலையில், கிருத்திகா ரெட்டி உயிரிழந்து 6 மாதங்களுக்கு பின்பு அவரது கணவரான டாக்டர் மகேந்திர ரெட்டியை மாரத்தஹள்ளி போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது கிருத்திகா ரெட்டி உடல்நலக்குறைவால் மரணம் அடையவில்லை, அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக கூறி மகேந்திர ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து போலீசாரும் கிருத்திகா ரெட்டியின் உயிரிழப்புக்க்கான சரியான காரணத்தை கண்டுபிடிக்க, சில மாதிரிகள் பெற்று, தடய அறிவியல ஆய்வுக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். அதன்படி, 6 மாதங்களுக்கு பின்பு தடய அறிவியல் அறிக்கை மாரத்தஹள்ளி போலீசாருக்கு கிடைத்திருந்தது.
அதில், கிருத்திகா ரெட்டி உடல் நலக்குறைவால் சாகவில்லை என்றும், அவருக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டதால் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, டாக்டரான மகேந்திர ரெட்டியை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது கிருத்திகா ரெட்டிக்கு அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்பட்டு வந்ததால், அவரை கொலை செய்துவிட்டு, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய மகேந்திர ரெட்டி முடிவு செய்துள்ளார். இதற்காக கடந்த ஏப்ரல் மாதம் உடல் நலக்குறைவுக்காக ஓய்வெடுக்க பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்த கிருத்திகா ரெட்டிக்கு ஏப்ரல் 21-ந் தேதியில் இருந்து தொடர்ந்து மயக்க ஊசியை மகேந்திர ரெட்டி செலுத்தி வந்துள்ளார்.
இதனால் அவர் ஏப்ரல் 23-ந் தேதி இரவு உயிரிழந்திருந்தார். மாமனார் வீட்டில் வைத்தே மனைவியை கொலை செய்துவிட்டு, யாருக்கும் சந்தேகம் வராத வண்ணம் மகேந்திர ரெட்டி நடந்து கொண்டு இருந்தார். ஆனால் டாக்டராக இருந்தாலும் தடய அறிவியல் அறிக்கை காட்டி கொடுத்ததால் போலீசாரிடம் மகேந்திர ரெட்டி சிக்கியுள்ளார். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Man kills wife by injecting her with anesthesia How did you get caught?