திருத்துறைப்பூண்டி மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் நடந்த காதல் திருமணம் - போலீசார் பாதுகாப்பு.!
love couples marriage in marxist communist office in thiruthuraipoondi
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வரம்பியம் ஊராட்சியைச் சேர்ந்தவர் அமிர்தா. எம்.எஸ்சி. பட்டதாரியான இவர் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா மாத்தூரை சேர்ந்த சஞ்சய்குமார் என்பவரை கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தார். ஒருகட்டத்தில் அமிர்தா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சஞ்சய்குமாரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் சஞ்சய்குமார் வீட்டில் காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது.
ஆனால், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சஞ்சய்குமார் குடும்பத்தை சேர்ந்த சிலரும், அமிர்தாவின் குடும்பத்தாரும் கலந்து பேசி 27.8.2025 அன்று அதாவது நேற்று நாகை மாவட்டம் எட்டுக்குடியில் உள்ள முருகன் கோவிலில் வைத்து இருவருக்கும் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். இதற்காக அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டு திருமண வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன.

திருமணத்திற்காக சஞ்சய்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று முன்தினம் மணமகளின் வீட்டுக்கு வருவதாக கூறி இருந்தனர். ஆனால் அவர்கள் நேற்று முன்தினம் இரவு வரை வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அமிர்தா, சஞ்சய்குமாரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது, செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதனால் பதற்றம் அடைந்த அவர் மணமகனின் சகோதரிகளிடம் பேசியபோது, உறவினர்கள் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சஞ்சய்குமாரை எங்கேயோ அழைத்துச் சென்று விட்டதாக தெரிவித்தனர். இந்த செயல் அமிர்தா மற்றும் குடும்பத்தினரை மிகுந்த பதற்றத்துக்குள்ளாக்கியது.
இது குறித்து அமிர்தாவின் சகோதரர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் தெரிவித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் கிராமத்துக்கு சென்று விசாரித்தபோது சஞ்சய்குமாரை உறவினர்கள் அழைத்துச்சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி நேற்று அதிகாலை ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள உறவினர்கள் வீட்டில் சஞ்சய்குமார் இருப்பதை கண்டறிந்தனர். உடனே போலீசார் சஞ்சய் குமாரை அங்கிருந்து அழைத்து வந்து அவருடைய காதலி அமிர்தா வீட்டில் ஒப்படைத்தனர். இதையடுத்து இருவருக்கும் திருத்துறைப்பூண்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நேற்று மதியம் முறைப்படி திருமணம் நடந்தது. இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
love couples marriage in marxist communist office in thiruthuraipoondi