விஷமாக மாறிய மதுபானம்.. மராட்டியத்தில் கள்ளச்சாராயத்திற்கு 18 உயிர்கள் பலி....! - உறவினர்கள் கதறல்...!
Liquor turned poisonous 18 lives lost due spurious liquor Maharashtra Relatives cry out
மராட்டிய மாநிலத்தின் பிம்ப்ரி-சின்ச்வாட் மற்றும் புனே நகரங்களை உலுக்கிய விஷச்சாராய சோகம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட கள்ளச்சாராயத்தை அருந்தியதால் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் நிலவி வருகிறது.பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் உள்ள டபோடி மற்றும் புகேவாடி பகுதிகளில் 8 பேரும், புனே நகரின் காலே படல் பகுதியில் 3 பேரும், ஹடாப்சர் பகுதியில் 2 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அருகிலுள்ள பகுதிகளிலும் பலர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த கொடிய விஷச்சாராயத்தை யோகேஷ் வான்கடே என்பவர் தயாரித்து விற்பனை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
நீண்டகாலமாக சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்த அவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இந்த சம்பவத்தை தொடர்ந்து யோகேஷ் வான்கடேவை காவலர்கள் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த சட்டவிரோத கள்ளச்சாராய விற்பனை வலையமைப்பில் தொடர்புடைய மற்ற நபர்களையும் கண்டுபிடிக்க விரிவான தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மராட்டியத்தை உலுக்கிய இந்த உயிரிழப்பு சம்பவம் குறித்து மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கடும் அதிருப்தி தெரிவித்ததுடன், சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது இரக்கமற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக புனே மற்றும் பிம்ப்ரி-சின்ச்வாட் காவல் ஆணையர்களுக்கு நேரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தில் தொடர்புடையவர்கள்மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஷச்சாராய மரணங்கள் மராட்டிய மாநிலம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனையை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
English Summary
Liquor turned poisonous 18 lives lost due spurious liquor Maharashtra Relatives cry out