தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி பாராட்டி ஜனநாயக மக்கள் நலப் பேரவை கடிதம்!
Letter of appreciation to the Chief Minister of Tamil Nadu from the Democratic Peoples Welfare Council
அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் தமிழக அரசு அறிவித்துள்ள “நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தை” பாராட்டி, வரவேற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில்..
தமிழ்நாட்டில் முதலமைச்சராக தாங்கள் பொறுப்பேற்ற பிறகு தங்களது தலைமையின் கீழ் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் திராவிட மாடல் ஆட்சியில் பெண்களின் நலன், முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து. சமூக நீதியை தொடர்ந்து நிலைநாட்டி இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சராக அனைவராலும் போற்றப்படுகிறீர்களென்றால் அது மிகையாகாது. மேலும் தமிழ்நாட்டில் தங்களால் நடைமுறைப்படுத்தப்படும் பொதுமக்களுக்கான அனைத்து நலத் திட்டங்களும் நாடு முழுவதும் பெரும் வரவேற்பினை பெற்று அனைவராலும் பாராட்டப்படுவதுடன், இந்தியாவின் பிற மாநிலங்களில் ஆட்சி செய்யும் முதலமைச்சர்கள் மேற்கண்ட நலத்திட்டங்களை தங்களது மாநிலத்திலும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர் என்கின்ற வகையில் தனி சிறப்பை பெற்றுள்ளீர்கள்.
அந்த வகையில் தற்பொழுது மேலும் ஒரு சிறந்த திட்டமாக “நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தை” அறிவித்து விவசாயத்தை தொழிலாக செய்து வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி பெண்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துதல், விவசாய நில உடமையாளர்களாக அங்கீகரித்து உயர்த்திடும் வகையில், இத்திட்டத்தின் கீழ் தகுதியுடைய பயனாளிகளின் பெயரில் விவசாய நிலம் வாங்குவதற்கு நிலத்தின் சந்தை மதிப்பில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூபாய் 5 லட்சம் வரை மானியமாக வழங்கப்படுவதுடன், அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் வரை புஞ்சை நிலம் வாங்குவதற்கு வழிவகை செய்து தமிழக அரசு அறிவித்துள்ளதை மக்கள் நலப் பேரவை பாராட்டி வரவேற்கின்றது.
மேலும் இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெற விரும்பும் பயனாளிகள் தமிழ்நாடு சமூக நலத்துறையின் தாட்கோ (தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்) இணையதளமான www.tahdco.com மூலம் விண்ணப்பிக்க வேண்டுமெனவும், மற்றும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தகுதிகள் - நிபந்தனைகள் மற்றும் சலுகைகள் குறித்த விபரங்கள் குறிப்பிடப்பட்டு அதன்படி விண்ணப்பதாரர் விவசாய தொழில் செய்பவராக இருக்க வேண்டுமெனவும், வயது 18 லிருந்து 55 வயதுக்குட்பட்டும், குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமலும் மற்றும் சொந்தமாக விவசாய நிலம் எங்கும் இருக்கக்கூடாதெனவும், பயனாளிகள் வாங்கும் நிலத்தின் விலை சந்தை மதிப்பின்படி நிர்ணயிக்கப்படுவதுடன், முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து 100% முழுமையான விலக்கு அளிக்கும் வகையிலும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் பயனாளிகள் நிலம் வாங்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கி(IOB) வட்டியில்லா கடன் வழங்குவதுடன், இத்திட்டத்தின் வாயிலாக வாங்கிய நிலத்தை 10 ஆண்டுகள் வரை விற்பனை செய்யக்கூடாது என்கின்ற நிபந்தனையுடன் தமிழக அரசு பயனாளிகளின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு ஷரத்துக்களை வகுத்து நடைமுறைப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.
“நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்” தமிழக அரசால் கடந்த நிதி மானிய கோரிக்கை அறிவிப்பின் போது அறிவிக்கப்பட்டடு கடந்த 2023 – 2024 ம் நிதியாண்டில் இத்திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 175 பயனாளிகள் பயனடையும் வகையில் ரூபாய்.8.50 கோடி மானியமாக வழங்கப்பட்டதுடன், நடப்பு நிதியாண்டுக்கு ரூபாய்.20 கோடி என மானியம் ஒதுக்கப்பட்டு, இதுவரை மாநிலம் முழுவதும் 408 பயனாளிகளுக்கு 19.98 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி 38 மாவட்டங்கள், 25 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 226 தாலுகாக்கள், 518 பேரூராட்சிகள், 15,049 கிராமங்கள், 12,525 கிராம ஊராட்சிகள் மற்றும் 385 ஊராட்சி ஒன்றியங்களென நகர்புற மற்றும் ஊரக உள்ளாட்சி கட்டமைப்பு இருக்கின்றது.
மேற்கண்ட அனைத்து இடங்களிலும் வாழ்ந்து வரும் விவசாயத்தை தொழிலாக செய்து வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி சமூகத்தைச் சார்ந்த தகுதியுடைய அனைத்து பெண்களுக்கும் மற்றும் மேற்கண்ட நகரங்களை தவிர்த்து குறிப்பாக முழுமையான கிராமங்களாக கருதப்படும் 15049 கிராமங்களில் முழுவதுமாக நிலமற்றவர்களுக்கு முன்னுரிமை அளித்தும், மற்றும் தங்களுக்கென சொந்த நிலங்கள் வைத்துள்ள மேற்கண்ட சமூகத்தை சார்ந்த குடும்பங்களில், நிலங்கள் இல்லாத தகுதியுடைய வாரிசுதாரர்களை உறுதி செய்து அவர்களும் இத்திட்டத்தின் மூலம் பலனடைந்து நில உடமையாளர்களாகவும் மற்றும் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக விளங்கிடவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எதிர் வரும் நிதியாண்டில் இத்திட்டத்திற்கு அதிகப்படியான எண்ணிக்கையிலான பயனாளிகள் பயனடையும் வகையில், கூடுதல் நிதி ஒதுக்கி "நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்" வெற்றிகரமான திட்டமாக செயல்பட வழிவகை செய்திட வேண்டுமென அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் சார்பாக கோரிக்கை வைக்கின்றேன். மேலும் நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயத்தை ஊக்குவிக்கவும் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் வகையில் தமிழ்நாடு அரசு இது போன்ற பயனுள்ள பல நல்ல திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து செயல்படுத்துவதின் மூலம் நாட்டில் விவசாயம் செழிப்பதுடன், உணவு உற்பத்தியில் தன்னிறைவடையும் என கருத்து தெரிவித்து மக்கள் நலப் பேரவை தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Letter of appreciation to the Chief Minister of Tamil Nadu from the Democratic Peoples Welfare Council