மனைவியைக் கொடூரமாகத் தீர்த்துக்கட்டிய கூலித்தொழிலாளி...! - அதிர்ச்சியில் உறைந்த அக்கொண்டப்பள்ளி கிராமம்...!
laborer who brutally murdered his wife village Akondapalli shock
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கூலித்தொழிலாளி, அவர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது கொடுவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவியைக் கொன்றதாகக் கூறி, கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.கர்நாடக மாநிலம் பெங்களூரு பங்காரப்பா நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (32). கூலித்தொழிலாளியான இவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள அக்கொண்டப்பள்ளியைச் சேர்ந்த ருக்குமணி (28) என்பவருக்கும் திருமணமாகி, நைனா (8) என்ற மகள் உள்ளார்.
செல்போன் பேச்சால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, குமார் தனது மனைவி மற்றும் மகளுடன் அக்கொண்டப்பள்ளி கிராமத்தில் வாடகை வீட்டில் குடியேறினார். அங்கு கூலி வேலை செய்து வந்த அவர், ருக்குமணி அப்பகுதியில் உள்ள மெத்தை தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.இந்த நிலையில், ருக்குமணி அடிக்கடி செல்போனில் யாரிடமோ பேசுவதுடன், குறுஞ்செய்திகளும் அனுப்பி வந்ததாகத் தெரிகிறது. இதனால், மனைவியின் நடத்தையில் குமாருக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த மனைவி வெட்டிக் கொலை
இந்தச் சூழலில், நேற்று முன்தினம் நள்ளிரவில் ருக்குமணி வீட்டில் படுக்கையில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த குமார், அவரது தலையின் பின்பகுதியில் கொடுவாளால் வெட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதில் பலத்த காயமடைந்த ருக்குமணி, ரத்த வெள்ளத்தில் படுக்கையிலேயே உயிரிழந்தார்.
காவல் நிலையத்தில் கணவர் சரண்
மனைவியைக் கொலை செய்த பின்னர், குமார் நேராக கெலமங்கலம் காவல் நிலையத்திற்குச் சென்று, ருக்குமணியைக் கொலை செய்துவிட்டதாகத் தெரிவித்து சரணடைந்தார்.இதுகுறித்து தகவலறிந்த கெலமங்கலம் காவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று, ருக்குமணியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.குடும்பத் தகராறில் மனைவி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
laborer who brutally murdered his wife village Akondapalli shock