கேரள மருத்துவக் கல்லூரியில் பரபரப்பு...! ராகிங் புகாரில் பேராசிரியர்கள் நீக்கம்...! - ஒருவர் தலைமறைவு
Kerala Medical College state uproar Professors removed over ragging complaint One absconded
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த நித்தின் ராஜ் (23), கண்ணூர் மாவட்டம் அஞ்சரகண்டி அரசு மருத்துவக் கல்லூரியில் பி.டி.எஸ். (பல் மருத்துவம்) பயின்று வந்தார். கல்லூரி அனாடமி பாடப்பிரிவில் பணியாற்றிய பேராசிரியர்கள் இருவர் மற்றும் சில முதுநிலை மாணவர்கள் இணைந்து, அவருக்கு ராகிங் தொல்லை அளித்ததுடன், சாதி மற்றும் மத அடையாளங்களை சுட்டிக்காட்டி அவமதித்ததாகவும், அவரது நிறம் மற்றும் பொருளாதார நிலையை குறிவைத்து கடுமையாக கிண்டல் செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மனவேதனையால் துவண்டு போன நித்தின் ராஜ், கல்லூரி கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்பாக அவர் சமூக வலைதளத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்ததாகவும், அதில் அனாடமி பிரிவைச் சேர்ந்த பேராசிரியர்கள் ராம், சங்கீதா ஆகியோர் தன்னை ராகிங் செய்ததாக குறிப்பிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் கல்லூரி வளாகத்திலும், மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக கல்லூரி நிர்வாகம் விசாரணை மேற்கொண்டதைத் தொடர்ந்து, தொடர்புடைய பேராசிரியர்கள் ராம் மற்றும் சங்கீதா ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் சக்கரக்கல் காவல்நிலையத்தில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, கேரள மாநில கவர்னரும் பல்கலைக்கழக வேந்தருமான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், இந்த துயர சம்பவம் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதன்படி அமைக்கப்பட்ட விசாரணைக் குழு, கல்லூரியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் வாக்குமூலங்களை பதிவு செய்தது. அதில், பேராசிரியர் ராமின் ராகிங் தொல்லை காரணமாகவே மாணவர் உயிரிழந்ததாகவும், அவரை பணியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் பலர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, குற்றச்சாட்டுகள் தீவிரமடைந்த நிலையில் பேராசிரியர் ராம் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும், காவலர்கள் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் கல்வி வளாகங்களில் ராகிங் குறித்த கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
English Summary
Kerala Medical College state uproar Professors removed over ragging complaint One absconded