கொட்டாவி விட்டா தாடை எலும்பு இடம்பெயர்ச்சியா? குமரி இளைஞருக்கு நடந்தது என்ன?!
kanniyakumari Yawn young man issue
கன்னியாகுமரி–அசாம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த வாலிபர் ஒருவருக்கு கொட்டாவி விடும் போதே திடீரென வாய் மூட முடியாத அதிர்ச்சி நிலை ஏற்பட்டது.
பாலக்காடு ரயில் நிலையம் வந்தபோது, வழக்கம்போல் கொட்டாவி விட்ட அந்த வாலிபர் திடீரென வாயை மூட முடியாமல் தவித்தார். வலி அதிகரித்ததால் பேசவும் இயலாத நிலையில் துடித்தார். இதைக் கண்டு அதிர்ந்த பயணிகள் உடனே ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
மருத்துவ அதிகாரி பி.எஸ். ஜிதன் உடனடியாக வந்து, அந்த வாலிபருக்கு அவசர சிகிச்சை அளித்தார். சிகிச்சைக்கு பின் அவர் வாயை மூடி பேசக்கூடிய நிலையில் திரும்பினார். பின்னர் அவர் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.
இதுகுறித்து மருத்துவர் ஜிதன் கூறுகையில், “அவருக்கு ஏற்பட்டது டெம்பரோமாண்டிபுலர் ஜாயிண்ட் டிஸ்லொகேஷன் எனப்படும் தாடை எலும்பு இடம்பெயர்ச்சி. இது கொட்டாவி விடும்போது தாடை எலும்பின் பந்துபூட்டு இயல்பான இடத்தில் இருந்து நகர்வதால் ஏற்படும். அப்போது வாய் திறந்த நிலையிலேயே முடங்கி விடும். பேச, உணவு உண்ண, வாய் மூட முடியாமல் வலி ஏற்படும்,” என்றார்.
“அதிகமாக கொட்டாவி விடுதல், திடீர் அதிர்ச்சி அல்லது விபத்து, சில நோய்கள் ஆகியவை இதற்குக் காரணமாக இருக்கலாம். சிறிய அளவில் ஏற்பட்டால் மருத்துவ சிகிச்சையால் சரியாகும். ஆனால் சிலர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையும் ஏற்படும்,” எனவும் அவர் கூறினார்.
பாலக்காடு ரயில் நிலையத்தில் நடந்த இந்த நிகழ்வு, “ஒரு சாதாரண கொட்டாவியும் சில சமயம் மருத்துவ அவசர நிலைதான்” என்பதை நினைவூட்டியது.
English Summary
kanniyakumari Yawn young man issue