இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு அப்துல் கலாம் விருதும், துளசிமதி முருகேசனுக்கு கல்பனா சாவ்லா விருதும் அறிவிப்பு..!
ISRO Chairman Narayanan to be conferred with Abdul Kalam Award
நாளை நாடு முழுவதும் 79-வது சுதந்திர தின நிகழ்வுகள் கொண்டாடப்படவுள்ளது. இந்த சுதந்திர தினத்தினை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் அப்துல் கலாம், கல்பனா சாவ்லா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு அப்துல் கலாம் விருது வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவரை தொடர்ந்து, காஞ்சிபுரம் துளசிமதி முருகேசனுக்கு துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த வி. நாராயணன் செயல்படுகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள திரவ உந்து அமைப்பு மையத்தின் (எல்பிஎஸ்சி) இயக்குநராக பணியாற்றியுள்ளார். கரக்பூர் ஐஐடி-யில் பட்டம் பெற்ற இவர், 1984-ஆம் ஆண்டு இஸ்ரோவில் சேர்ந்தார்.

இந்திய விண்வெளித் துறையில் 40 ஆண்டு அனுபவமுள்ள ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானியாக நாராயணன் உள்ளார். இவர் ராக்கெட் மற்றும் விண்கல திரவ உந்து விசையில் நிபுணத்துவம் பெற்றவர். ஆரம்ப காலத்தில், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் ஒலி ராக்கெட்டுகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் ஏவுதளம் மற்றும் துருவ செயற்கைக்கோள் ஏவுதளம் ஆகியவற்றின் திட உந்துவிசை பகுதியில் பணியாற்றியுள்ளார்.
இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி57, சூரிய ஆய்வுக்கான ஆதித்யா எல்1 திட்டம், ஜிஎஸ்எல்வி மாக்-3 வகை ஏவுகணைக்கான ‘சிஇ20 கிரையோஜெனிக்’ இன்ஜின் தயாரிப்பு, சந்திரயான் 2 மற்றும் 3 உள்ளிட்ட பல திட்டங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை இவர் அளித்துள்ளார்.
English Summary
ISRO Chairman Narayanan to be conferred with Abdul Kalam Award