இஸ்ரேல் நிறுவனங்களை புறக்கணிக்க வேண்டும்...தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்!
Israeli companies should be boycotted Strong demand for Tamil Nadu government to act
இஸ்ரேல் நிறுவனங்கள் பங்கேற்கும் வணிக நிகழ்வை தமிழ்நாடு அரசு புறக்கணிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:இஸ்ரேல் அரசு தொடர்ந்து நிகழ்த்தி வரும் மனிதாபிமானமற்ற கொடூரமான வான்வழி தாக்குதலுக்கு பாலஸ்தீன மக்கள் இரையாகி வருவது பதற வைக்கிறது. இத்தாக்குதலினால் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்படுவது குறித்து இஸ்ரேல் கவலைப்படுவதாக தெரியவில்லை. பாலஸ்தீன மக்களுக்காக ஆதரவாக மறைந்த பிரதமர் இந்திரா காந்தி உள்ளிட்டவர்கள் ஆதரவு வழங்கி வந்தார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள்.
இத்தகைய கொடூரமான தாக்குதல் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலையை உடனடியாக நிறுத்த வேண்டுமென்று தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளை தவிர உலகநாடுகள் அனைத்தும் இஸ்ரேலின் பயங்கரவாத நடவடிக்கைகளை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்தாலும் இஸ்ரேல் தனது போக்கை மாற்றிக் கொள்வதாக தெரியவில்லை.
இந்நிலையில் அக்டோபர் 7 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை சென்னையில் உலகளாவிய வான்வழி மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் பங்கேற்கும் மிகப்பெரிய வணிக நிகழ்வு இஸ்ரேல் அரசுடன் தொடர்புடைய பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இத்தகைய நெருக்கடியான பின்னணியில் இஸ்ரேல் அரசுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இணைந்து செயல்படும் எந்த நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசு வணிக விளம்பரம் வழங்குவதை தவிர்க்க வேண்டும். இஸ்ரேல் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது காந்தி, நேரு, இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி உள்ளிட்ட தலைவர்களின் வழிகாட்டுதலுக்கும், வெளிநாட்டுக் கொள்கைகளுக்கும் நேர் எதிரானதாகும்.
பாலஸ்தீன மக்களின் துயரத்திலும் தமிழக மக்கள் பங்கேற்கிறார்கள் என்பதை உறுதி செய்கிற வகையில் இஸ்ரேல் நிறுவனங்கள் நடத்தும் வணிக நிகழ்வுக்கு எந்தவிதமான ஒத்துழைப்பையோ, ஆதரவையோ வழங்குவதை தவிர்க்க வேண்டுமென தமிழ்நாடு முதல்-அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன். இந்நிகழ்வை தமிழ்நாடு அரசு புறக்கணிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Israeli companies should be boycotted Strong demand for Tamil Nadu government to act