பீஸ் கேரியர் திருட்டுதான் காரணமா...? மின்தடை குறித்து எழும் புகார்களுக்கு விநோதக் காரணங்கள் சொல்வதா? - தமிழக அரசுக்கு இபிஎஸ் காட்டம்...!
Is reason theft fuse carrier they give strange reasons complaints about power outage EPS disgrace Tamil Nadu government
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அறிவிப்பின்றி நிகழும் மின்தடைகளும் பொதுமக்களின் அதிருப்தியை அதிகரித்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மாநிலம் முழுவதும் நகரங்கள், கிராமங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மக்கள் அதிகம் பேசும் வார்த்தையாக "மின்சாரம் போனது... இன்னும் வரவில்லை" என்பது மாறிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
ஒருபுறம் 40 டிகிரியை தாண்டிய கடும் வெப்பம் மக்களை வாட்டி வதைக்க, மறுபுறம் தொடரும் அறிவிக்கப்படாத மின்தடை பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வீடுகள், சிறு மற்றும் குறுந்தொழில்கள், விவசாயம், மாணவர்களின் கல்வி என பல துறைகள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய மின்சார ஆணையத்தின் கணிப்பின்படி, தமிழகத்தின் மின் தேவை 2026-27 ஆம் ஆண்டில் 23 ஆயிரத்து 13 மெகாவாட் வரை உயரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கேற்ப மின் உற்பத்தி, மின் கொள்முதல், சேமிப்பு வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்கள் போதுமான அளவில் முன்னெடுக்கப்படவில்லை என்ற கேள்வி எழுவதாக அவர் கூறியுள்ளார்.
புதிய தொழிற்சாலைகள், மின்சார வாகனங்களின் அதிகரிப்பு, புதிய குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களின் வளர்ச்சி ஆகியவை மின் தேவையை தொடர்ந்து உயர்த்தி வரும் நிலையில், எதிர்காலத்தை முன்னிட்டு அரசின் திட்டமிடல் ஏன் பலப்படுத்தப்படவில்லை என்பது மக்களின் கேள்வியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை முதல் கன்னியாகுமரி வரை சமூக வலைதளங்களில் தினமும் நூற்றுக்கணக்கான புகார்கள் பதிவாகி வருவதாகவும், இரவு நேர மின்தடையால் குழந்தைகள் அவதிப்படுவது முதல் ஆன்லைன் தொழில்கள் முடங்குவது வரை பல்வேறு சிக்கல்கள் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், சிறு தொழிற்சாலைகளின் உற்பத்தி பாதிப்பு, விவசாய பம்புசெட்டுகள் செயலிழப்பு, மாணவர்களின் கல்வி பாதிப்பு, சிறு வணிகர்களின் வருமான இழப்பு மற்றும் மருத்துவ சேவைகளில் ஏற்படும் தடைகள் போன்றவை மின்தடையின் தீவிர விளைவுகளாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மின்தடை குறித்து எழும் கேள்விகளுக்கு உரிய தீர்வுகளை வழங்குவதற்கு பதிலாக, "மின் கடத்தி கட்டை திருட்டு" போன்ற காரணங்கள் கூறப்படுவதாக விமர்சித்துள்ள அவர், மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் இத்தகைய காரணங்கள் எப்படி நிகழ முடியும் என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளார்.
மாவட்ட வாரியாக மின் தேவை, மின் உற்பத்தி, மின் கொள்முதல் மற்றும் அதிக தேவை காணப்படும் பகுதிகள் குறித்த உண்மையான தரவுகளை வெளிப்படையாக வெளியிட்டு, குறைகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மின்சாரம் என்பது வெறும் அடிப்படை வசதி மட்டுமல்ல; தொழில் வளர்ச்சி, கல்வி முன்னேற்றம், விவசாய உற்பத்தி, வேலைவாய்ப்பு மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கையை இயக்கும் உயிர்நாடி என குறிப்பிட்டுள்ள நயினார் நாகேந்திரன், காரணங்களை கூறுவதில் நேரத்தை செலவிடாமல் தடையற்ற மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Is reason theft fuse carrier they give strange reasons complaints about power outage EPS disgrace Tamil Nadu government