பிரதமரின் தாயை இழிவுபடுத்துவதா? ராகுல்காந்தி பேச்சு தேசத்தை அவமதிக்கும் செயல் - வானதி சீனிவாசன் காட்டம்!
Insulting the Prime Minister mother Rahul Gandhi speech is an act of insulting the nation Vanathi Srinivasan statement
பீகாரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற வாக்காளர் அதிகார யாத்திரை தற்போது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த யாத்திரையின் போது, பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியை இழிவுபடுத்தும் வகையில் சிலர் கோஷமிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதையும் தாண்டி, மேடையில் இருந்த ராகுல் காந்தி மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் இதை ரசித்ததாக பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கடுமையாகக் கண்டித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்,“பிரதமரின் தாயாரை இழிவுபடுத்துவது, தனி நபரை மட்டுமல்ல, முழு தேசத்தையும் அவமதிக்கும் செயல். பிரதமர் நரேந்திர மோடி, 140 கோடிக்கும் அதிகமான மக்களுடைய தலைமைக்குரியவர். அவரது தாயார், எளிமையின் உச்சமாக வாழ்ந்து மறைந்தவர். அரசியல் செயல்களில் ஈடுபடாத அவர், தேசத்தின் தாயைப் போன்றவர். அவரை இழிவுபடுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் கோஷமிட்டுள்ளனர். அதை கண்டிக்காமல், ராகுல் காந்தியும் தேஜஸ்வி யாதவும் ரசித்தது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது” என்று கூறினார்.
மேலும் அவர்,“பிரதமர் பதவியை தனது குடும்பச் சொத்தாக நினைத்த ராகுல் காந்தியின் கனவை, பிரதமர் மோடி தகர்த்துவிட்டார். அந்த விரக்தியில் தான் ராகுல் காந்தி, பொய்களை பரப்பி நாட்டில் வன்முறையை தூண்டும் வகையில் கலக யாத்திரையை நடத்துகிறார். அந்த யாத்திரையில்தான் பிரதமரின் தாயாரை இழிவுபடுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. காங்கிரஸின் வெறுப்பு அரசியல், மக்களிடம் எப்போதுமே தோல்வியடைந்தது. இந்த முறை கூட மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்றார்.
அதே நேரத்தில்,“பிரதமரின் தாயாரை குறிவைத்து பேசியதற்காக, ராகுல் காந்தியும் தேஜஸ்வி யாதவும், உடனடியாக நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.
English Summary
Insulting the Prime Minister mother Rahul Gandhi speech is an act of insulting the nation Vanathi Srinivasan statement