இனி அமெரிக்க பொருட்களை ஆன்லைனில் வாங்க மாட்டோம் என இந்திய மக்கள் முடிவு எடுக்க வேண்டும்- எச்.ராஜா
Indian people should decide not to buy American products online anymore H Raja
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமெரிக்கா இந்தியாவுக்கு எதிராக விதித்துள்ள 50 சதவீத வரி நடவடிக்கை குறித்து கடுமையாக விமர்சித்தார். அவர் கூறியதாவது:
“மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் தான் இந்தியா, கேட் (GATT) குழுவில் உறுப்பினராக சேர்க்கப்பட்டது. ஆனால், இப்போது அமெரிக்கா விதித்துள்ள வரி காரணமாக அந்த உடன்படிக்கை தோல்வியடைந்ததாகவே கருத வேண்டும்.
இந்த நிலையில், இந்திய மக்கள் அனைவரும் சுதேசி பொருட்களை வாங்க வேண்டும். குறிப்பாக, அமெரிக்க பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்காமல் இருக்க வேண்டும். பொருளாதார நடவடிக்கைக்கு எதிராக, பொருளாதார ரீதியில்தான் பதிலடி கொடுக்க முடியும்.
2024-25-ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 825 பில்லியன் அமெரிக்க டாலர். அதில் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 60 பில்லியன் டாலர் மட்டுமே. இது மொத்த ஏற்றுமதியில் 7.25 சதவீதம் தான். எனவே, மற்ற நாடுகளோடு வர்த்தகத்தை அதிகரிப்பதன் மூலம், அமெரிக்கா சந்தையில் ஏற்படும் இழப்புகளை சமாளிக்க முடியும்.
மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கும் வகையில், ஜி.எஸ்.டி வரியில் சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதேபோல், மக்கள் தரப்பில் கடமை என்னவெனில், ஆன்லைன் மூலம் வெளிநாட்டு பொருட்களை வாங்காமல் இருக்க வேண்டும். வ.உ.சி. இலங்கைக்கு சொந்த பணத்தில் கப்பல் இயக்கி தேசபற்று காட்டியதைப் போல, இன்றைய சூழ்நிலையில் நாமும் செயல்பட வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.
மேலும், நடிகர் விஜய் குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். “சிறுபான்மையினர் வாக்குகள் மட்டுமே போதும் என விஜய் முடிவு செய்துள்ளார். சிறுபான்மை வாக்குகளுக்காக அரசியலில் வந்ததாக அவர் கூறுவது, இந்து வாக்குகளை விரும்பவில்லை என்பதை காட்டுகிறது.
தி.மு.க.வும் பா.ஜ.க.வும் மறைமுக கூட்டணி வைத்துள்ளன என விஜய் கூறுவது வெறும் பிதற்றல். பா.ஜ.க. அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளது. அதேபோல் தி.மு.க.வும் 1999-ல் வாஜ்பாய் அரசுடன் கூட்டணி வைத்திருந்தது. முரசொலி மாறன் அப்போது மத்திய அமைச்சராக இருந்தார். இது ரகசிய உறவோ கள்ள உறவோ அல்ல. நல்ல அரசியல் உறவு தான்.
கல்வி கொள்கையில் தி.மு.க.வின் பாதையை பின்பற்றி வரும் விஜய் முதலில் அரசியலை படித்து தெரிந்து கொள்ள வேண்டும். 1974-ல் கச்சத்தீவை இலங்கைக்கு தானம் செய்தது காங்கிரஸ் அரசு. அதற்கு தி.மு.க ஆதரவு அளித்தது. இதற்கு எதிராக அப்போது வாஜ்பாய் பாராளுமன்றத்தில் பேசினார்.
அப்படியிருக்க, காங்கிரசை விஜய் ஏன் கண்டிக்கவில்லை? கச்சத்தீவை ஒப்பந்தத்திற்கு ஆதரித்த காங்கிரஸ், தி.மு.க ஆகியவற்றுக்கும் கள்ள உறவு இருக்கிறதா? எனக்கு விஜய் பதில் சொல்ல வேண்டும்,” என எச். ராஜா தெரிவித்துள்ளார்.
English Summary
Indian people should decide not to buy American products online anymore H Raja