அதிகரிக்கும் நாய்க்கடி சம்பவம்! மாநகராட்சி எடுத்த அதிரடி முடிவு!வளர்ப்பு நாய்கள் வைத்திருப்பவர்களுக்கு ஆப்பு!
Increasing dog bite incidents The Corporation has taken a drastic decision A warning to those who own pet dogs
சென்னை மாநகராட்சி எல்லைக்குள் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், செல்லப்பிராணி நாய்களை வைத்திருப்போருக்கு மாநகராட்சி கடும் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது.
சமீபத்தில், சென்னை ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த கருணாகரன் (48) என்பவரை பக்கத்து வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது. இதைத் தடுக்க முயன்ற நாய் உரிமையாளர் பூங்கொடிக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களில், செல்லப்பிராணி நாய்களுக்கு கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும், வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். நாய்களுக்கு உணவு, தண்ணீர், இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை பராமரிப்புகளை உரிமையாளர்கள் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், பொது இடங்களுக்கு நாய்களை அழைத்துச் செல்லும் போது சங்கிலி, கழுத்துப்பட்டை, முகமூடி கட்டாயம் பயன்படுத்தப்பட வேண்டும். மக்கள் கூடும் இடங்களில் சங்கிலி இன்றி நாய்களை விடக் கூடாது. ஒரே நேரத்தில் ஒரு செல்லப்பிராணியை மட்டுமே பொது இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிகளை மீறி உரிமம் பெறாமல், அல்லது வெறித்தனமாக நடந்து கொள்ளும் நாய்களை பொது இடங்களில் விடும் உரிமையாளர்களுக்கு, இந்திய பிராணிகள் நல வாரியம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின் படியும், குற்றவியல் சட்டத்தின் படியும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.
பொது இடங்கள், குடியிருப்பு வளாகங்கள், லிப்ட் உள்ளிட்ட இடங்களில் நாய்களின் நடவடிக்கைகள் பிறருக்கு அச்சம் அல்லது அசௌகரியம் அளிக்கக் கூடாது என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி விதிகளின்படி, உரிமம் மற்றும் தடுப்பூசி பெற்ற நாய்களே பொது இடங்களுக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படும் எனவும், மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Increasing dog bite incidents The Corporation has taken a drastic decision A warning to those who own pet dogs