ரகசிய குடோனில் வெடித்த விவகாரம்...! விருதுநகரில் விதிகளை மீறி பேன்சி பட்டாசு தயாரிப்பு...அதிரடிப் பறிமுதல்...!
incident explosion secret warehouse Fancy firecrackers being manufactured violation rules Virudhunagar Seizure crackdown
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சாத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் குருசாமியின் உத்தரவின்பேரில், சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தார் ஆண்டாள், மண்டல துணை வட்டாட்சியர் பாண்டி, கிராம நிர்வாக அலுவலர் சத்யபாபு ஆகியோர் தலைமையில் சங்கரபாண்டியாபுரம் பகுதியில் பட்டாசு ஆலைகள் ஆய்வு செய்யப்பட்டன.

அப்போது அப்பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஸ்டாலின் ராஜாவிற்கு சொந்தமான பட்டாசு ஆலையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
மாவட்ட வருவாய் அலுவலரின் அனுமதியுடன் சிறிய ரக பட்டாசுகள் தயாரிக்க மட்டுமே உரிமம் பெற்றிருந்த அந்த ஆலையில், நாக்பூர் அனுமதி தேவைப்படும் பேன்சி ரக வெடிபொருட்கள் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வந்தது தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படாமல், மரத்தடியில் வெடிபொருள் தயாரிப்பு பணிகள் நடைபெற்றது அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்தது. அதோடு ஆலையில் மிக அதிகளவில் பட்டாசுகள் குவித்து வைக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து உடனடியாக அங்கிருந்த பட்டாசுகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு, ஆலையின் அறை ஒன்றில் பாதுகாப்பாக வைத்து மண்டல துணை வட்டாட்சியர் பாண்டி சீல் வைத்தார்.
இதைத் தொடர்ந்து சங்கரபாண்டியாபுரம் கிராம நிர்வாக அலுவலர் சத்யபாபு, ஏழாயிரம்பண்ணை காவலர்களிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் பாபு விசாரணை மேற்கொண்டு, ஆலையின் உரிமையாளர் ஸ்டாலின் ராஜா மீது வழக்குப்பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
incident explosion secret warehouse Fancy firecrackers being manufactured violation rules Virudhunagar Seizure crackdown