தேர்வு எழுத முடியாமல் போன ஆத்திரம்; கல்லூரி அலுவலக அறையை உருட்டுக்கட்டையால் அடித்து நொறுக்கி சூறையாடிய முன்னாள் மாணவன்..!
In Nagercoil a former student smashes and ransacks a college administrative office using a wooden club
நாகர்கோவில் அருகே உள்ள கோணம் பகுதியில், அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. வழக்கம் போல கல்லூரி திறக்கப்பட்டு வகுப்பு தொடங்கிய போது நபர் ஒருவர் உருட்டு கட்டையுடன் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.
கல்லூரி அலுவலகத்தில் புகுந்து ஆக்ரோஷத்தில் ஈடுபட்டுள்ளதோடு, அலுவலக மேசை, நாற்காலிகளை உடைத்தவர், டாக்குமென்ட் பைல்கள் வைக்கப்படும் அலமாரி கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கியுள்ளார்.
இந்த கல்லூரியின் முன்னாள் மாணவனான கர்ணன் என்பவரே இவ்வாறு அத்துமீறி நுழைந்தது மட்டுமின்றி, அலுவலக அறையை சூறையாடி கல்லூரியைப் பரபரப்பாக்கியுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்க நிலையில், அதிகாரிகள் வருவதற்குள், கர்ணன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இந்த கல்லூரியில் 2020 - 23 காலகட்டத்தில் படித்த கர்ணன், கல்லூரிக்கு முறையாக வராததால் தேர்வு எழுத முடியாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் கல்லூரியில் இருந்து பாதியில் நின்றவர், மீண்டும் வேறு ஒரு கல்லூரியில் சேர்ந்து படித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில்தான் தேர்வு எழுத முடியாமல் போனதற்கு இதே கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவர்தான் காரணம் என நினைத்து, கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இது உறுதியாக சம்பவத்தில் ஈடுபட்ட கர்ணனைப் பிடித்து விசாரிக்கும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர்.
English Summary
In Nagercoil a former student smashes and ransacks a college administrative office using a wooden club