மனைவியைக் கொன்றுவிட்டு அதே வீட்டில் நிம்மதியாகத் தூங்கிய கணவன்...! சென்னையில் அதிர வைக்கும் சம்பவம்...!
husband slept peacefully same house after killing his wife shocking incident Chennai
சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 38). உணவு வினியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவரது மனைவி சுதா (28). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், குழந்தைகள் இல்லை. கணவன்-மனைவி இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு இருவரும் வீட்டில் ஒன்றாக மது அருந்திக் கொண்டிருந்தனர்.

அப்போது சுதா, மேலும் மது வாங்கி வருமாறு கணவரிடம் கேட்டுள்ளார். அதற்கு லோகநாதன், மதுக்கடை மூடப்படும் நேரம் நெருங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து சுதா, "வெளியில் கூடுதல் விலைக்கு வாங்கி வந்துவிடு" என வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு முற்றியது.தகராறு தீவிரமடைந்த நிலையில், ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற லோகநாதன், சுதாவின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி நெரித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதில் மூச்சுத்திணறி சுதா உயிரிழந்தார்.மனைவி உயிரிழந்ததை அறிந்தும், மது போதையில் இருந்த லோகநாதன் அதே வீட்டில் படுத்து தூங்கிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மறுநாள் காலை எழுந்தபோதுதான் சுதா உயிரிழந்த நிலையில் கிடந்தது அவருக்கு தெரியவந்துள்ளது.இதையடுத்து வீட்டை பூட்டிவிட்டு வெளியேறிய லோகநாதன், தரமணி பகுதியில் நீண்ட நேரம் சுற்றித்திரிந்துள்ளார். பின்னர் மாலையில் சைதாப்பேட்டை சென்ற அவர், தனக்கு தெரிந்த நபர் ஒருவரிடம் மனைவியை கொலை செய்துவிட்டதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் துரைப்பாக்கம் காவலர்கள் விரைந்து சென்று, சைதாப்பேட்டையில் இருந்த லோகநாதனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி, சுதாவின் உயிரிழப்பு தொடர்பான காரணங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
மது அருந்திய நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு கொலை சம்பவமாக மாறிய இந்த நிகழ்வு, பெருங்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
husband slept peacefully same house after killing his wife shocking incident Chennai