எடப்பாடி பழனிசாமி என்னை நீக்கவில்லை என்றால் இன்று அமைச்சராகியிருக்க முடியாது- செங்கோட்டையன்
If Edappadi Palaniswami hadnot removed me I wouldnot have become a minister today Sengottaiyan
எடப்பாடி பழனிசாமி தன்னை அதிமுகவில் இருந்து நீக்கியதால்தான் இன்று அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்ததாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தன்னைத் தாங்கிப் பிடித்து அமைச்சராக்கி அழகு பார்ப்பவர் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் என்றும் அவர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் மழையால் ஏற்படும் பாதிப்புகளைச் சமாளிக்க முதல்வர் விஜய் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். மழை பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காகத் தானும் சென்னைக்குச் செல்வதாகக் கூறிய அவர், முதல்வர் விஜயின் ஒப்புதலுடன் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். தண்ணீர் தேங்கும் பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக 250 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதிமுகவைச் சேர்ந்த 15 எம்எல்ஏக்கள் தவெகவில் இணையப் போவதாகத் தாம் ஒருபோதும் கூறவில்லை என்று விளக்கமளித்த செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து 15 பேர் வருவார்கள் என்றுதான் தெரிவித்ததாகக் கூறினார். 15 அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவுக்கு வருவார்கள் என்று தாம் கூறியதற்கான பதிவைக் காட்டுமாறும் அவர் சவால் விடுத்தார். இந்த விவகாரங்கள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், அனைத்துக்கும் இப்போது பதில் சொல்ல முடியாது என்றும் காலம்தான் பதில் சொல்லும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய செங்கோட்டையன், உலகத்தைச் சில தலைவர்கள் வென்று காட்டியிருக்கலாம்; ஆனால் காலத்தை யாராலும் வெல்ல முடியாது என்றார். காலத்தை வென்று காட்டியவர் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தமிழக முதல்வருமான விஜய்தான் என்றும் அவர் புகழாரம் சூட்டினார். அதிமுகவில் கட்சியினரை நீக்குவதையே வழக்கமாகக் கொண்டுள்ளதாக விமர்சித்த அவர், இதுபோன்ற விவகாரங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப்பிட்டார்.
மேலும், எடப்பாடி பழனிசாமி தன்னை அதிமுகவில் இருந்து நீக்கியதைக் குறிப்பிட்ட செங்கோட்டையன், “நல்ல மகராசன் எனக்கு நல்லது செய்துவிட்டார். என்னை நீக்கவில்லை என்றால் இன்று அமைச்சராகியிருக்க முடியாது. என்னைத் தாங்கிப் பிடித்து இன்று அமைச்சராக்கி அழகு பார்க்கிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். அவருக்கு வாழ்த்துகளைச் சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது” என்று தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக தொடர்ந்து தேர்தல் தோல்விகளைச் சந்தித்த நிலையில், கட்சியில் இருந்து விலகியவர்களையும் நீக்கப்பட்டவர்களையும் மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று பல்வேறு நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர். சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்தன. இருப்பினும், இந்த விவகாரங்களில் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதன் காரணமாக அதிமுகவில் இருந்து பலர் விலகியதாகக் கூறப்படுகிறது.
ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு தனியாகச் செயல்படத் தொடங்கினார். இதேபோல் தோப்பு வெங்கடாசலம், செம்மலை, அன்வர் ராஜா, மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட பலரும் கட்சியில் இருந்து விலகினர். இதையடுத்து, எஞ்சியிருக்கும் நிர்வாகிகளையாவது தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று செங்கோட்டையன் குரல் கொடுத்தார். ஆனால், அவரும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு அவர் திமுகவில் இணையக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
தொடர்ந்து, தேர்தலில் கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட விஜய் செங்கோட்டையனுக்கு வாய்ப்பு வழங்கினார். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற செங்கோட்டையன், தற்போது தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகிக்கிறார். மேலும், சட்டமன்றத்தில் அவை முன்னவராகவும் உள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் தவெகவில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அமைச்சராக உயர்ந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
English Summary
If Edappadi Palaniswami hadnot removed me I wouldnot have become a minister today Sengottaiyan