சொத்து ஆசையால் பல் மருத்துவரை கொன்ற கொடூரம்...! தாயையும் தம்பியையும் கொன்று நாடகமாடிய அண்ணன்கள் கைதானது எப்படி...?
How were brothers who killed their mother and younger brother and staged drama arrested
சென்னையில் சொத்து ஆசை இரட்டை கொலையாக வெடித்துள்ள அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்மருத்துவரான இளைய மகனையும், அவரது தாயாரையும் திட்டமிட்டு கொலை செய்ததாக மூத்த இரு சகோதரர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அண்ணாநகர் கிழக்கு முதல் அவென்யூ பகுதியில் வசித்து வந்தவர் அஷ்ரப் நிஷா (68). பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தனது மூன்று மகன்களுடன் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார். மூத்த மகன் அப்ரார் அகமது (50), அவரது மனைவி பாத்திமா, இரண்டாவது மகன் அஸ்ரார் அகமது (48) மற்றும் இளைய மகன் பல்மருத்துவர் அஷ்ரப் அகமது (42) ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்திற்கு முந்தைய இரவு அப்ரார் அகமது தனது மனைவியுடன் வெளியே சென்றதாகவும், பின்னர் அஸ்ரார் அகமதும் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் வீட்டில் அஷ்ரப் நிஷாவும், பல்மருத்துவர் அஷ்ரப் அகமதும் மட்டுமே இருந்துள்ளனர்.மறுநாள் அதிகாலை வீடு திரும்பிய இருவரும், தாயாரும் தம்பியும் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்ததாக கூறி அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு முக்கிய தடயங்களை சேகரித்தனர்.ஆரம்பத்தில், நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கில் மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து இருவரையும் கொலை செய்திருக்கலாம் என்று சகோதரர்கள் விளக்கம் அளித்தனர்.
ஆனால் சம்பவ இடத்தில் வெளிநபர்கள் நுழைந்ததற்கான எந்த சுவடும் கிடைக்காததால் காவலர்களின் சந்தேகம் குடும்ப உறுப்பினர்கள் மீது திரும்பியது.தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், சொத்து பிரச்சினையே இந்த இரட்டை கொலையின் பின்னணியாக இருந்தது அம்பலமானது. குடும்பத்தினர் அளித்த தகவலின்படி, சுமார் ரூ.1 கோடிக்கும் அதிக மதிப்புள்ள வீட்டை விற்பனை செய்ய வேண்டும் என்று மூத்த இரு மகன்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர்.
அந்த இடத்தை வாங்க விருப்பம் தெரிவித்த கட்டுமான நிறுவனம், புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டி, உரிமையாளர்களுக்கு இரண்டு வீடுகளும் கூடுதலாக பணமும் வழங்க முன்வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் தனது கணவர் உழைத்து சம்பாதித்த வீட்டை விற்க விருப்பமில்லை என்றும், அந்த முடிவால் இளைய மகனுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் கருதிய அஷ்ரப் நிஷா அதற்கு உறுதியாக மறுப்பு தெரிவித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாயாரின் முடிவுக்கு பல்மருத்துவரான அஷ்ரப் அகமதும் ஆதரவு தெரிவித்ததால், குடும்பத்தில் கடந்த சில மாதங்களாக கடுமையான கருத்து மோதல் நீடித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.மேலும், சம்பவத்தன்று சொத்தை விற்பனை செய்ய அனுமதி கோரி மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அது உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், மூத்த இரு மகன்களும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த தாயாரை கடுமையாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் அவரது கைகளையும் கால்களையும் பிடித்தபடி தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் செயலில் அப்ரார் அகமதுவின் மனைவி பாத்திமாவும் உடந்தையாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.அதன்பிறகு, தாயாருக்கு ஆதரவாக இருந்த பல்மருத்துவர் அஷ்ரப் அகமதுவையும் தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது.
குற்றச்செயலை மறைக்க இருவரின் உடல்களையும் வீட்டிலேயே விட்டுவிட்டு வெளியேறிய அவர்கள், மறுநாள் அதிகாலையில் மீண்டும் வந்து, மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்திற்காக இருவரையும் கொலை செய்ததாக நாடகமாடியதும் விசாரணையில் அம்பலமானது.
இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த காவலர்கள், அப்ரார் அகமது, அவரது மனைவி பாத்திமா, அஸ்ரார் அகமது உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்து, சம்பவத்தின் பின்னணி மற்றும் இதில் தொடர்புடைய மற்ற விவரங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
How were brothers who killed their mother and younger brother and staged drama arrested