வேலூரில் நடுரோட்டில் பயங்கரம்...! ரூ.20 லட்சம் மதிப்பிலான பேட்டரி லாரி கொழுந்துவிட்டு எரிந்ததால் பரபரப்பு...!
Horror middle road Vellore battery truck worth 20 lakhs caught fire and caused stir
சென்னையில் இருந்து மகாராஷ்டிர மாநிலத்தின் புனே நகரை நோக்கி புறப்பட்ட சரக்கு லாரியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பான சூழல் நிலவியது. தீயின் கோர தாண்டவத்தால் லாரியின் பின்பகுதி முழுவதும் தீக்கிரையானது.
போரூரில் இருந்து சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான ராட்சத தொழிற்சாலை பேட்டரிகளை ஏற்றிக்கொண்டு புனே நோக்கி சென்ற லாரியை, கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தமிழரசன் (30) இயக்கிச் சென்றார்.வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே நேற்று காலை லாரி சென்று கொண்டிருந்தபோது, அதன் பின்பகுதியில் இருந்து திடீரென புகை கிளம்பத் தொடங்கியது.

இதைக் கவனித்த ஓட்டுநர் உடனடியாக வாகனத்தை சாலையோரமாக நிறுத்தி தீயை கட்டுப்படுத்த முயன்றார். எனினும், சில நிமிடங்களிலேயே தீ வேகமாக பரவி லாரியின் பின்பகுதியை முழுமையாக ஆக்கிரமித்தது.இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பள்ளிகொண்டா தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
தீயின் தீவிரம் அதிகமாக இருந்ததால், முதலில் பயன்படுத்தப்பட்ட தீயணைப்பு வாகனத்தில் இருந்த தண்ணீர் முழுமையாக தீர்ந்தது. இதையடுத்து குடியாத்தத்தில் இருந்து கூடுதல் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடிய பின்னரே தீ முழுமையாக அணைக்கப்பட்டது. அதற்குள் லாரியின் பின்பகுதி கடுமையாக சேதமடைந்திருந்தது.இந்த தீ விபத்தால் சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி, வாகனங்களை மாற்று வழிகளில் இயக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.தீ அணைக்கப்பட்ட பிறகு போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது.
இதையடுத்து பள்ளிகொண்டா காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்து ஏற்பட்டதற்கான துல்லியமான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழிற்சாலை பேட்டரிகளில் ஏற்பட்ட கோளாறே தீ விபத்துக்கு காரணமாக இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Horror middle road Vellore battery truck worth 20 lakhs caught fire and caused stir