பேரறிவாளன் வழக்கறிஞராக பதிவு செய்தமைக்கு எதிராக வழக்கு; பார் கவுன்சில் 04 வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!
High Court orders Bar Council to respond in case challenging Perarivalans enrollment as an advocate
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்தவர் பேரறிவாளன், உச்ச நீதிமன்றத்தால் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டார்.
இதனையடுத்து கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி அவர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக தன்னை பதிவு செய்துகொண்டார்.
அதனை தொடர்ந்து அவரது வழக்கறிஞர் பதிவை நிறுத்தி வைத்து நீதிமன்றங்களில் வழக்காட அனுமதிக்கக் கூடாது என பார் கவுன்சிலுக்கு உத்தரவிடக் கோரி சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ரவி ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதாவது, வழக்கறிஞர் சட்டத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டு தண்டிக்கப்பட்டவர்களை வழக்கறிஞராக பதிவு செய்யக் கூடாது என்று அவரது மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக தண்டிக்கப்பட்ட பேரறிவாளனை வழக்கறிஞராக பதிவு செய்தது வழக்கறிஞர் சட்டத்துக்கு விரோதமானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த மனு மீதான வழக்கு நீதிபதிகள் எஸ்.சௌந்தர் மற்றும் பி.பி.பாலாஜி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுதர்சனா சுந்தர், 'பேரறிவாளனை நீதிமன்றம் நிரபராதி என விடுதலை செய்யவில்லை என்பதால் வழக்கறிஞர் சட்டப்படி வழக்கறிஞராக பதிவு செய்யும் தகுதியை இழக்கிறார்' என சுட்டிக்காட்டி வாதிட்டுள்ளார்.
இந்த வாதத்தைக் கேட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள், இந்த மனுவுக்கு நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி இந்திய பார் கவுன்சிலுக்கும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.
English Summary
High Court orders Bar Council to respond in case challenging Perarivalans enrollment as an advocate