மறைக்கப்பட்ட கொலை வெளிச்சம் கண்டது...! தற்கொலை போல காட்டிய கணவன் சிக்கியது எப்படி...?
hidden murder come light How husband caught after faking suicide
கடலூர் மாவட்டம் வடலூர் வ.உ.சி. நகரை சேர்ந்த பிரேம் ஆனந்த் (44) என்பவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவருக்கும், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி (34) என்பவருக்கும் காதல் மலர்ந்து பின்னர் திருமணமாகி, ஒரு பெண் குழந்தை பிறந்தது.
தனலட்சுமி, அண்ணாமலைநகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார்.வேலைக்காக அடிக்கடி வெளிநாடு சென்று வந்த பிரேம் ஆனந்த், 2015 டிசம்பர் மாதம் ஊருக்கு திரும்பியபின் மனைவியின் நடத்தை குறித்து சந்தேகம் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதங்களும் மனக்கசப்பும் உருவாகி வந்தது.2016 ஜனவரி 25ஆம் தேதி காலை வீட்டை விட்டு வெளியேறிய தனலட்சுமி, இரவு நேரத்தில் வீடு திரும்பியதைத் தொடர்ந்து மீண்டும் கடுமையான தகராறு வெடித்தது. அதில் ஆத்திரம் அடைந்த பிரேம் ஆனந்த், தனலட்சுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் சம்பவத்தை மறைக்க, அவர் தற்கொலை செய்துகொண்டது போல காட்சியமைத்து தூக்கில் தொங்கவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் வடலூர் காவலர்கள் மேற்கொண்ட தீவிர விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. தனலட்சுமி கொலை செய்யப்பட்டதாக உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பிரேம் ஆனந்த் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, கடலூர் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கில் சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் முழுமையாக பரிசீலிக்கப்பட்ட நிலையில், நீதிபதி குலசேகரன் தீர்ப்பளித்தார். குற்றம் நிரூபிக்கப்பட்டதால், பிரேம் ஆனந்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதுடன், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் வளர்மதி ஜெயச்சந்திரன் ஆஜராகி வாதாடினார் என்று தெரிவிக்கப்படுகிறது.
English Summary
hidden murder come light How husband caught after faking suicide