கேஸ் பில் கட்டாயம் இல்லை...! -புதிய ரேஷன் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு உணவுப்பொருள் வழங்கல் துறை அதிரடி தெளிவு...!
Gas bill not mandatory Food Supply Department issues clarification new ration card applicants
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதிய ரேஷன் கார்டு விண்ணப்பத்துடன் கேஸ் சிலிண்டர் இணைப்புக்கான ரசீதை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டியதில்லை என்று உணவுப்பொருள் வழங்கல் துறை தெளிவுபடுத்தியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் புதிய ரேஷன் கார்டு கேட்டு, மாவட்ட அளவிலான இ-சேவை மையங்கள் வாயிலாக பொதுமக்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இவ்வாறு விண்ணப்பிக்கும் போது, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கான ரசீலையும் கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று சில வட்ட வழங்கல் அலுவலர்கள் அறிவுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ரேஷன் கார்டு இல்லாதவர்கள், அதைப் பெற்ற பிறகே கேஸ் சிலிண்டர் இணைப்பைப் பெற முடியும் என்ற நிலை உள்ள நிலையில், ரசீது கட்டாயம் என்ற தகவலால் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியாமல் பொதுமக்கள் பலர் சிரமத்திற்கு உள்ளாகினர். இதுதொடர்பாக அரசின் கவனத்திற்கும் பல்வேறு புகார்கள் சென்றன.
இதையடுத்து, உணவுப்பொருள் வழங்கல் துறை துணை ஆணையர் ராகினி ரவிச்சந்திரன், புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் தொடர்பாக தெளிவான அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளார்.அதில், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது கேஸ் சிலிண்டர் இணைப்புக்கான ரசீதை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய ரேஷன் கார்டுக்காக விண்ணப்பித்த பிறகு, அதற்கான நடவடிக்கைகள் நிறைவடைந்து சுமார் 60 நாட்களுக்குப் பின்னர் ரேஷன் கார்டு கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் அட்டைகளையும் கட்டாயமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனுடன், முகவரி மற்றும் வசிப்பிடத்திற்கான ஆதாரமாக சொத்து வரி ரசீது, வாடகை ஒப்பந்தப் பத்திரம், மின் கட்டண ரசீது அல்லது கேஸ் சிலிண்டர் ரசீது ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஆவணத்தை இணைக்கலாம் என்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.இதனால், கேஸ் சிலிண்டர் ரசீது இல்லாத காரணத்தால் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வந்த பொதுமக்களுக்கு தற்போது ஏற்பட்டிருந்த குழப்பம் நீங்கியுள்ளது.
English Summary
Gas bill not mandatory Food Supply Department issues clarification new ration card applicants