நெல்லையை உலுக்கிய  கூட்டு பாலியல் போக்சோ வழக்கு...! கொடூர ரவுடிக்கு மரண தண்டனை...! - Seithipunal
Seithipunal


நெல்லையில் பிளஸ்-2 மாணவியை ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அவரது நிர்வாணப் புகைப்படத்தை செல்போனில் பதிவு செய்து மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வழக்கில் ரவுடிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவரது கூட்டாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், மாணவியை அழைத்துச் சென்றவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நெல்லை போக்சோ சிறப்பு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.நெல்லையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெள்ளை அடிக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரன் (26) உள்ளிட்டோர் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அருகில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவிக்கும், முனீஸ்வரனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியதாகவும், மாணவியை திருமணம் செய்து கொள்வதாக முனீஸ்வரன் ஆசைவார்த்தை கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 10.10.2022 அன்று மாணவியை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்ற முனீஸ்வரன், பாளையங்கோட்டை வீரராகவபுரம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த நேரத்தில் அங்கு வந்த 2 வாலிபர்கள், மாணவி இருந்த நிலையை தங்களது செல்போனில் படம் எடுத்துள்ளனர்.

மாணவியின் நிர்வாணப் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாகக் கூறி, அவரையும் முனீஸ்வரனையும் அந்த 2 பேரும் மிரட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் மாணவியை அச்சுறுத்தி கட்டாயப்படுத்தி, இருவரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.விசாரணையின் போது மாணவியை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் நெல்லை கொக்கிரகுளம் கீழவீரராகவபுரத்தைச் சேர்ந்த சின்னக்குட்டி (28), முருகேசன் (23) என்பது தெரியவந்தது.

இதையடுத்து மாணவியை ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்ற முனீஸ்வரன் மற்றும் சின்னக்குட்டி, முருகேசன் ஆகிய 3 பேரையும் காவலர்கள் கைது செய்தனர். இதில் சின்னக்குட்டி, முருகேசன் ஆகியோர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருந்ததால், அவர்கள் ரவுடிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்த வழக்கு நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், சின்னக்குட்டி, முருகேசன், முனீஸ்வரன் ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என கடந்த வாரம் தீர்ப்பளித்தார். அவர்களுக்கான தண்டனை விவரம் 8-ந்தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து 3 பேரும் பலத்த காவலர் பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் தண்டனை விவரத்தை அறிவித்தார்.அதன்படி, மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்த சின்னக்குட்டிக்கு தூக்கு தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.அவரது கூட்டாளியான முருகேசனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

மாணவியை ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்ற முனீஸ்வரனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.நீதிபதி சுரேஷ்குமார் இதுவரை 10 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

போக்சோ சிறப்பு கோர்ட்டில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்குகளில் மட்டும் 4 பேருக்கும், மகளை கர்ப்பமாக்கிய தந்தைகள் தொடர்பான 5 வழக்குகளிலும் தூக்கு தண்டனை வழங்கியுள்ளார்.

இதுதவிர, 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற 3 பேர் கொலை வழக்கில் 4 பேருக்கும், மற்றொரு கொலை வழக்கில் ஒருவருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். இதன்மூலம் இதுவரை மொத்தம் 10 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி சுரேஷ்குமார் அதிரடி தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

gang harassment POCSO case that shook paddy field Death sentence cruel rowdy


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->