பசியை போக்க வந்த உணவு, உயிரையே காப்பாற்றிய நெகிழ்ச்சிச் சம்பவம்...! - 83 வயது தாத்தாவிற்கு நேர்ந்த அதிசயம்...! - Seithipunal
Seithipunal


மதுரை ஆண்டாள்புரத்தைச் சேர்ந்த நடராஜன் (83), அறநிலையத் துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், மகன் ஸ்வீடனிலும் மகள் வேலூரிலும் வசித்து வருகின்றனர். இதனால் ஆண்டாள்புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அவர் தனியாக வசித்து வந்தார்.தனிமையில் வாழ்ந்து வந்த நடராஜன், அன்றாட உணவுத் தேவைகளை இணையவழி மூலம் ஆர்டர் செய்து பெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தன்று வழக்கம்போல் மதிய உணவு அவரது இல்ல வாசலில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் நீண்ட நேரமாகியும் அந்த உணவு எடுக்கப்படாமல் இருந்துள்ளது.மாலை நேரத்தில் இரவு உணவை கொண்டு வந்த விநியோகப் பணியாளர், மதிய உணவுப் பொட்டலம் அப்படியே கிடப்பதை கண்டு சந்தேகமடைந்தார். உடனடியாக அண்டை வீட்டினரிடம் தகவல் தெரிவித்து, அனைவரும் இணைந்து பலமுறை கதவைத் தட்டி அழைத்தனர்.

இருப்பினும் உள்ளிருந்து எந்த பதிலும் வரவில்லை.இதையடுத்து, ஸ்வீடனில் வசித்து வரும் நடராஜனின் மகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரும் தொடர்ந்து செல்பேசியில் தொடர்பு கொள்ள முயன்றும் பதில் கிடைக்காததால் பதற்றமடைந்தார். உடனடியாக அவசர உதவி எண்ணை தொடர்புகொண்டு, தனது தந்தையை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தார்.

தகவல் கிடைத்ததும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியினர் அதிகாரி சுரேஷ் கண்ணன் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். முதலில் கதவைத் தட்டி அழைத்தும் எந்த பதிலும் கிடைக்காததால், மீட்புக் குழுவினர் கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைந்தனர்.வீட்டின் ஒவ்வொரு அறையிலும் தீவிரமாக தேடிய அவர்கள், இறுதியாக கழிவறைப் பகுதியில் சுயநினைவின்றி மயக்க நிலையில் கிடந்த நடராஜனை கண்டுபிடித்தனர்.

உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நடராஜன் உடல்நலம் தேறி வீடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.இதுகுறித்து மீட்புப் பணியினர் தெரிவித்ததாவது,"வெளிநாட்டில் இருந்த அவரது மகன் அவசர உதவி எண்ணின் மூலம் தகவல் அளித்ததும் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்றோம்.

வீட்டின் கதவை பலமுறை தட்டியும் எந்த சத்தமோ பதிலோ வரவில்லை. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று அனைத்து அறைகளிலும் தேடுதல் மேற்கொண்டோம். பின்னர் கழிவறைப் பகுதியில் மயக்க நிலையில் கிடந்த முதியவரை கண்டுபிடித்து உடனடியாக மருத்துவ உதவி வழங்கினோம்" என்றனர்.

உணவுப் பொட்டலம் நீண்ட நேரம் எடுக்கப்படாமல் இருந்ததை கவனித்த உணவு விநியோகப் பணியாளரின் விழிப்புணர்வும், வெளிநாட்டில் இருந்த மகனின் உடனடி நடவடிக்கையும் இணைந்து முதியவரின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

food that came satisfy hunger life saving incident miracle that happened 83 year old grandfather


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->