வெள்ள அபாய எச்சரிக்கை! மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடி உயர்வு... 10 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை நடவடிக்கை...!
Flood warning Mettur dam water level rises by 120 feet Warning action for people in 10 districts
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாட்டிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவிலுள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பியதால் 2 அணைகளிலிருந்தும் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.மேலும், கடந்த 25-ந் தேதி 45000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் 26-ந் தேதி காலை 60000 கன அடியாகவும், நேற்று இரவு 8 மணியளவில் 85,000 கன அடியாகவும் அதிகரித்தது.

மேலும், இரவு 8 மணி நிலவரப்படி கபினி மற்றும் கே.ஆர்.எஸ். ஆகிய 2 அணைகளிலிருந்தும் விநாடிக்கு 86,800 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.இதில் இன்று காலை 8 மணி நிலவரப்படி 2 அணைகளிலிருந்தும் நீர்வரத்து குறைந்து வினாடிக்கு 58,000 கன அடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.இதன் காரணமாக அங்குள்ள மெயினருவி மற்றும் ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. அப்பகுதியில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பி வருகின்றனர்.மேலும், மேட்டூர் அணைக்கு நேற்று நீர்வரத்து 80,984 கன அடியிலிருந்து 68,000 குறைந்தது. மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 120 அடியாக உள்ளது. முழு கொள்ளளவை 120 அடியை எட்டி உள்ளதால் இன்று காலை உபரி நீர் வெளியேறும் 16 கண் மதகிலிருந்து தண்ணீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால், காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நீர் பாசனம் பெறும் மாவட்ட கலெக்டர்களுக்கு அணை உபகோட்ட உதவி பொறியாளர் அறிவுறுத்தியுள்ளார்.மேலும், சேலம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர்,ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில், நீர்வளத்துறை அதிகாரிகள் முகாமிட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உபரி நீர் வெளியேறும் மதகுப்பகுதியில் ஷிப்ட் முறையில் பணியாளர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். காவிரி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அதற்கேற்ப மதகுகளை இயக்குவதற்கு பணியாளர்கள் தயாராக உள்ளனர்.
English Summary
Flood warning Mettur dam water level rises by 120 feet Warning action for people in 10 districts