தங்கக் காசு விவகாரத்தில் கைதான பெண் காவல் அதிகாரி...! - தமிழக காவல் துறையில் பெரும் பரபரப்பு...! - Seithipunal
Seithipunal


சக காவல்துறையினர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரிடம், குறைந்த விலையில் தங்கக் காசுகள் பெற்றுத் தருவதாக கவர்ச்சிகரமான வாக்குறுதி அளித்து ரூ.20 கோடிக்கும் அதிகமான தொகையை பெற்று மோசடி செய்ததாக எழுந்துள்ள பரபரப்பான வழக்கில், ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆய்வாளர் ஷீலா மேரியை பொருளாதார குற்றப்பிரிவு காவலர்கள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றிய ஷீலா மேரி, தனது வாகன ஓட்டுநரான பிரபு மணியுடன் இணைந்து, சந்தை விலையை விட மிகவும் குறைந்த விலையில் தங்கக் காசுகள் வழங்கப்படும் என நம்பிக்கை ஏற்படுத்தி, காவல்துறையினர் மற்றும் அவர்களது அறிமுக வட்டாரத்தினரிடம் பெருமளவில் முதலீட்டு தொகையை வசூலித்ததாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

ஆரம்பத்தில் குறைந்த தொகையில் தங்கக் காசுகளை வழங்கி நம்பிக்கையை உருவாக்கிய பிரபு மணி, பின்னர் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடாக பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு உறுதியளித்தபடி தங்கக் காசுகளை வழங்காமலும், பெற்ற பணத்தையும் திருப்பிச் செலுத்தாமலும் தலைமறைவானதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த மோசடி வலையமைப்பில் ஷீலா மேரி முக்கிய உடந்தையாக செயல்பட்டதுடன், முதலீட்டாளர்களை அறிமுகப்படுத்தி பணம் திரட்டியதற்காக தனியாக கமிஷன் பெற்றதும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் பாதிக்கப்பட்ட காவல்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு காவலர்கள் தீவிர விசாரணையை தொடங்கினர்.

அதன் தொடர்ச்சியாக முக்கிய குற்றவாளியான பிரபு மணியை ஏற்கனவே கைது செய்திருந்த காவலர்கள், வழக்கின் முக்கிய ஆதாரங்களை சேகரித்து விசாரணையை விரிவுபடுத்தினர்.இந்த விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ரூ.20 கோடிக்கும் அதிகமான மோசடிக்கு துணைநின்ற குற்றச்சாட்டில் ஷீலா மேரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, கடந்த ஜூன் 15-ஆம் தேதி வடக்கு மண்டல காவல் இணை ஆணையரின் உத்தரவின்பேரில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து கைது நடவடிக்கையைத் தவிர்க்கும் நோக்கில் ஷீலா மேரி முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடியிருந்தார். எனினும், அவரது மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.இதனைத் தொடர்ந்து, சென்னையில் பதுங்கியிருந்த ஷீலா மேரியை பொருளாதார குற்றப்பிரிவு காவலர்கள் நேற்று இரவு சுற்றிவளைத்து கைது செய்தனர்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்த மோசடி வழக்கில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, மோசடி செய்யப்பட்ட தொகையின் முழுமையான அளவு என்ன, பணப் பரிமாற்றம் எவ்வாறு நடைபெற்றது, இன்னும் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் பொருளாதார குற்றப்பிரிவு காவலர்கள் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Female police officer arrested gold coin case Huge stir Tamil Nadu Police Department


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->