குடும்பத்தகராறில் கொடூரம்...! மனைவியை இரும்புக்கம்பியால் அடித்துக் கொன்றுவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த கணவன்...!
Family dispute turns brutal Husband beats wife death iron rod and surrenders police station
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகேயுள்ள நடுக்காவேரி காவலர் சரக எல்லைக்குட்பட்ட மணத்திடல் பிரதான சாலைப் பகுதியில் வசித்து வந்தவர் ரவிச்சந்திரன் (58). இவரது மனைவி ஜெயலட்சுமி (50). குடும்பத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த கருத்து முரண்பாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலட்சுமி தஞ்சாவூரில் உள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றி வந்த நிலையில், தனது மகன் மற்றும் மகளுடன் அங்கு வசித்து வந்தார். இந்நிலையில், ரேஷன் அரிசி பெறுவதற்காக நேற்று மணத்திடலில் உள்ள கணவரின் இல்லத்துக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் வெடித்துள்ளது.
இந்த தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன், இரும்புக் கம்பியால் ஜெயலட்சுமியை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த ஜெயலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன்பின்னர் ரவிச்சந்திரன் நேரடியாக நடுக்காவேரி காவலர் நிலையத்துக்குச் சென்று சரணடைந்தார்.
இந்தத் தகவலறிந்த காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஜெயலட்சுமியின் உடலை மீட்டு திருவையாறு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், ரவிச்சந்திரனை கைது செய்த காவலர்கள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.குடும்பப் பிரச்சினை விபரீத முடிவை எட்டிய இந்த சம்பவம் மணத்திடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Family dispute turns brutal Husband beats wife death iron rod and surrenders police station