மத்திய அரசு தொடங்கிய பாரத் டாக்ஸி சேவையைச் சுற்றிய எதிர்பார்ப்பு! தமிழகத்தில் எப்போது ‘பாரத் டாக்ஸி’?
Expectations surrounding the Bharat Taxi service launched by the central government When will Bharat Taxi be launched in Tamil Nadu
தனியார் வாடகை கார் செயலிகளுக்கு மாற்றாக அரசால் தொடங்கப்பட்டுள்ள பாரத் டாக்ஸி சேவைக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஓட்டுநர்களின் நலனை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த சேவை, தமிழ்நாட்டில் எப்போது தொடங்கப்படும் என்ற கேள்வி தற்போது பொதுமக்கள் மற்றும் ஓட்டுநர்கள் மத்தியில் அதிக கவனம் பெறத் தொடங்கியுள்ளது.
இந்தியாவின் முதல் கூட்டுறவு அடிப்படையிலான வாகன முன்பதிவு சேவையாக பாரத் டாக்ஸி அறிமுகமாகியுள்ளது. தனியார் நிறுவனங்களான Ola மற்றும் Uber ஆகியவற்றுக்கு நேரடியான மாற்றாக இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் சேவை எப்போது?
மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 2026 பிப்ரவரி 5-ம் தேதி டெல்லியில் பாரத் டாக்ஸி சேவையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.முதற்கட்டமாக டெல்லி மற்றும் குஜராத் மாநிலங்களில் செயல்படத் தொடங்கியுள்ள இந்த சேவை, அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை” இந்த சேவை சென்றடையும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது. அந்த வகையில், சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் விரைவில் பாரத் டாக்ஸி சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய சிறப்பம்சங்கள்
பாரத் டாக்ஸி சேவை வழக்கமான தனியார் டாக்ஸி செயலிகளில் இருந்து பல வகைகளில் மாறுபடுகிறது.
-
தனியார் டாக்ஸிகளை விட சுமார் 30 சதவீதம் வரை குறைந்த கட்டணம்
-
மழை அல்லது நெரிசல் நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ‘சர்ஜ் பிரைசிங்’ முறை கிடையாது
-
இது ஒரு கூட்டுறவு அமைப்பு என்பதால், இதில் இணையும் ஓட்டுநர்கள் ‘சாரதிகள்’ என அழைக்கப்படுகிறார்கள்
-
ஓட்டுநர்களே இந்த அமைப்பின் பங்குதாரர்களாக இருப்பார்கள்
-
வருமானத்தில் கமிஷன் பிடித்தம் கிடையாது; நாளொன்றுக்கு சுமார் 30 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும்
பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகள்
பயணிகளின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பாரத் டாக்ஸி செயலி அரசின் டிஜிலாக்கர் மற்றும் உமங் போன்ற சேவைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. அவசர காலங்களில் பயன்படுத்த ‘SOS’ பட்டன் வசதியும், காவல்துறை கட்டுப்பாட்டு அறையுடன் நேரடி தொடர்பும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ‘பைக் திதி’ திட்டத்தின் கீழ் பெண் ஓட்டுநர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படுவதால், பெண்கள் வேலைவாய்ப்பையும் இந்த சேவை ஊக்குவிக்கும் என கூறப்படுகிறது.
குறைந்த கட்டணம், ஓட்டுநர் நலன், அரசு ஆதரவு ஆகிய காரணங்களால் பாரத் டாக்ஸி சேவை தமிழ்நாட்டில் தொடங்கினால், தனியார் டாக்ஸி நிறுவனங்களுக்கு இது பெரிய சவாலாக அமையும் என்று அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்கள் கருதுகின்றன. தமிழகத்தில் இந்த சேவை எப்போது நடைமுறைக்கு வரும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
English Summary
Expectations surrounding the Bharat Taxi service launched by the central government When will Bharat Taxi be launched in Tamil Nadu