'வாக்கு விற்கப்படாது...ஜனநாயகத்திற்கே அர்ப்பணிப்பு'...! - சமூக வலைத்தளங்களில் வைரலாகும் தூத்துக்குடி பதாகை...!
Votes not be sold Dedicated democracy Thoothukudi banner goes viral social media
தூத்துக்குடி மாசிலாமணிபுரத்தில் 1953-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, பல தலைமுறைகளாக பக்தி மரபை தாங்கி நிற்கும் ஸ்ரீ காசி விநாயகர் மற்றும் ஸ்ரீ சந்தன மாரியம்மன் திருக்கோவில், இப்போது ஜனநாயக விழிப்புணர்வின் ஒளிக்கோபுரமாக உயர்ந்து நிற்கிறது. இந்த திருக்கோவிலைச் சார்ந்த சுமார் 2,500 வரிதாரர்கள், வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு வாக்கின் மரியாதையையும் மகத்துவத்தையும் காக்கும் வகையில் ஒருமித்த உறுதியை எடுத்துள்ளனர்.

கோவில் நுழைவாயிலில் கண்களை கவரும் வகையில் நிறுவப்பட்டுள்ள பதாகை, சமூக சிந்தனையைத் தூண்டும் வல்லமை பெற்றதாக அமைந்துள்ளது. அதில், “ஓட்டு என்னும் அரிய மூலதனத்தை நாடி வரும் அன்பர்களும் தொழிலதிபர்களும் கவனிக்க! எங்கள் குலதெய்வமான ஸ்ரீ காசி விநாயகர் - ஸ்ரீ சந்தன மாரியம்மன் திருக்கோவில் வரிதாரர்கள், உறுப்பினர்கள் மற்றும் பக்தர்களின் ஓட்டு விற்பனைக்கான பொருள் அல்ல; அது ஜனநாயகத்தின் உயிர்நாடி!” என்ற தாக்கமிக்க வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் தர்மகர்த்தா சுப்பையா, கௌரவ தர்மகர்த்தா செம்புலிங்கம், பொருளாளர் சுடலைமணி மற்றும் கௌரவ ஆலோசகர் மாரிமுத்து ஆகியோர் இணைந்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: “எங்கள் திருக்கோவிலைச் சார்ந்த ஒவ்வொரு வரிதாரரும் தங்களது மனசாட்சிக்கும் ஜனநாயக நெறிமுறைகளுக்கும் இணங்க மட்டுமே வாக்களிப்பார்கள்.
எந்த சூழ்நிலையிலும் வாக்குகளை பணத்திற்காக விற்கும் செயல்களில் ஈடுபடமாட்டோம் என்பது எங்களின் உறுதி” எனத் தெரிவிக்கப்படுகின்றது.மேலும் அவர்கள் கூறியதாவது,“வாக்கு என்பது ஒரு நாட்டின் அடித்தளம்; அதனை பயன்படுத்தியே உள்ளாட்சி நிர்வாகத்திலிருந்து நாட்டின் உயரிய பதவிகள் வரை தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
நேர்மையும் நம்பகத்தன்மையும் கொண்ட தலைமை உருவாக வேண்டும் என்ற நோக்கில், வாக்கின் மதிப்பை காக்கும் பணியில் ஈடுபடுவது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். பொதுமக்களிடையே இந்த உணர்வை விதைக்கவே இந்த விழிப்புணர்வு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்படுகின்றது.
வாக்கு வாங்கும் பழக்கத்துக்கு எதிராக, ஆன்மீக அமைப்பைச் சார்ந்த பக்தர்கள் இவ்வாறு ஒன்றிணைந்து எடுத்துள்ள இந்த துணிச்சலான தீர்மானம், சமூக வலைத்தளங்களில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வேகமாக பரவி வருவதோடு, ஜனநாயகத்தின் மரியாதையை உயர்த்தும் முன்மாதிரியாகவும் பார்க்கப்படுகிறது.
English Summary
Votes not be sold Dedicated democracy Thoothukudi banner goes viral social media