கொடநாடு வழக்கு - சாட்சிய பதிவுக்கு நேரில் ஆஜராகும் எடப்பாடி பழனிசாமி.! - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புப்படுத்தி வீடியோ வெளியிட்டதாக டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மற்றும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராகக் கடந்த 2019 ஆம் ஆண்டு தற்போதைய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்டஈடு வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் சாட்சிகளைப் பதிவு செய்வதற்காக சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்து உத்தரவிட்டிருந்தது. ஆனால், எடப்பாடி பழனிசாமி உயர்நீதிமன்றத்தின் வளாகத்திலேயே இருக்கக் கூடிய மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக இயலாது எனவும், தனது வீட்டிலேயே சாட்சியைப் பதிவு செய்ய வழக்கறிஞரை ஆணையராக நியமிக்க வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனுவை விசாரணை செய்த தனி நீதிபதி, நேரில் ஆஜராகி எடப்பாடி பழனிசாமி சாட்சியம் அளிக்க விலக்கு அளித்ததுடன், அந்த நடைமுறையை அவருடைய வீட்டிலேயே மேற்கொள்வதற்காக வழக்கறிஞர் எஸ். கார்த்திகை பாலன் என்பவரை நியமித்து உத்தரவிட்டிருந்தார். 

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மேத்யூ சாமுவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர். மகாதேவன், முகமது சபிக் அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

அதன் படி, இந்த வழக்கு 5.01.2024 மீண்டும் விசாரணைக்கு வந்தபோது எடப்பாடி பழனிசாமியை ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய இரு நாட்கள் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, இன்று எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராகி சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edappadi palanisami appear in chennai high court for kodanadu estate case


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->