தசரா திருவிழா: கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள்!
Dussehra Festival Restrictions on Heavy Vehicles
குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா நடைபெறுவதால் அங்கு செல்லும் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் இந்த ஆண்டு நடைபெறும் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 23.9.2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது.வரும் 2.10.2025 அன்று இரவு சூரசம்கார நிகழ்வு மற்றும் 3.10.2025 அன்று காப்பு தரித்தல் நிகழ்வுடன் திருவிழா நிறைவடைய உள்ளது.
இந்தநிலையில் தசரா திருவிழாவை முன்னிட்டு 2.10.2025 மற்றும் 3.10.2025 ஆகிய 2 நாட்கள் திருச்செந்தூரிலிருந்து குலசேகரன்பட்டினம் வழியாக பெரியதாழை, உவரி மற்றும் தெற்கு பகுதிக்கு செல்வதற்கும் , குலசேகரன்பட்டினம் வழியாக திருச்செந்தூர் செல்வதற்கும் கனரக வாகனங்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
கனரக வாகனங்கள் அனைத்தும் குலசேகரன்பட்டினத்தை தவிர்த்து அதற்கு பதிலாக திருச்செந்தூர், பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம், மணிநகர், படுக்கப்பத்து மார்க்கமாக பெரியதாழை வழியாக கன்னியாகுமரி செல்லவும் அல்லது சாத்தான்குளம், திசையன்விளை மார்க்கமாக கன்னியாகுமரி செல்லவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதே போன்று கன்னியாகுமரி, பெரியதாழை, மணப்பாடு ECR ரோடு வழியாக செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் குலசேகரன்பட்டினத்தை தவிர்த்து அதற்கு பதிலாக பெரியதாழை ECR ரோடு வழியாக படுக்கப்பத்து, மணிநகர், மெஞ்ஞானபுரம், பரமன்குறிச்சி வழியாக திருச்செந்தூர் செல்லவும் அல்லது கன்னியாகுமரி, உவரி, திசையன்விளை, சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம் வழியாக திருச்செந்தூர் செல்லவும்.
காவல்துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
English Summary
Dussehra Festival Restrictions on Heavy Vehicles