நபிகளின் போதனைகள் அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானவை - மருத்துவர் இராமதாஸ் மிலாது நபி வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், " இஸ்லாமியர்களின் இறைதூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான மிலாதுன் நபி திருநாளைக் கொண்டாடும்  உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்களுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பு, அமைதி, சமய நல்லிணக்கம் ஆகியவற்றை உலகிற்கு போதிப்பதற்காகவே அவதாரம் எடுத்தவர் அண்ணல் நபிகள் நாயகம். உலகம் முழுவதும் சகோதரத்துவம் தழைக்கவேண்டும் என்பதை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வலியுறுத்தி வந்தவர். உண்மையின் வடிவமாக திகழ்ந்தவர். சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கவேண்டும் என்பதற்கு தலைசிறந்த உதாரணமாகத் திகழ்ந்தவர் அண்ணல் நபிகள். எத்தகைய தத்துவங்களையெல்லாம் போதித்தாரோ, அதன்படியே நபிகள் நாயகம் வாழ்ந்து காட்டினார்.

அண்ணல் நபிகளின் போதனைகள் இஸ்லாமியர்களுக்கு மட்டுமின்றி, உலககெங்கும் வாழும் அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானதாகும். அல்லவைகளை தவிர்த்து நல்லவற்றைக் கடைபிடித்து வாழ வேண்டும் என்று குழந்தைகளுக்கு பெற்றோரும், மாணவர்களுக்கு ஆசிரியரும் எவ்வாறு நல்வழி காட்டுவார்களோ, அதேபோல் தான் அண்ணல் நபிகளும் அறிவுரைகளை வழங்கியுள்ளார். பெற்றோர், ஆசிரியர்களின் ஆலோசனைகளை பின்பற்றுவதைப் போலவே நபிகளின் போதனைகளையும் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காக மிலாது நபி போன்ற பெருநாட்கள் கொண்டாடப்படுகின்றன.

உலகம் என்பது எல்லைகள் இல்லாத ஒற்றை கிராமமாக திகழ வேண்டும்; அனைவரும் சகோதர்களாக வாழ வேண்டும்; அவ்வாறு வாழ்ந்தால் உலகில் எந்த மோதலுக்கும், பகைக்கும் வாய்ப்பில்லை. இந்த உண்மையை உணர்ந்து உலகில் அன்பு, நட்பு, ஒற்றுமை, சகோதரத்துவம், சகிப்புத் தன்மை, எதிரிகளை மன்னிக்கும் பெருந்தன்மை ஆகியவை வளர்வதற்கும், அனைத்து நலன்களும், வளங்களும் பெருகவும் உழைக்க வேண்டும் என்று நபிகள் அவதரித்த இந்த நன்னாளில் நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம் " என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dr Ramadoss greetings about miladi nabi 2020


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->