முல்லைப் பெரியாற்றில் புதிய அணையா? என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?!
Dr Ramadoss Condemn to Kerala Govt for Mullai periyaru dam 2024
முல்லைப் பெரியாற்று அணை வலுவிழந்து உள்ளதால், அதற்கு மாற்றாக புதிய அணை கட்டுவது தான் ஒரே தீர்வு என்றும், அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் கேரள அரசு அறிவித்திருக்கிறது. முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருப்பதாகக் கூறி, இந்த சிக்கலுக்கு உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்து விட்ட நிலையில், மீண்டும், மீண்டும் இச்சிக்கலை எழுப்பி, இரு தரப்பு உறவுகளை சீர்குலைக்க கேரள அரசு முயல்வது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "கேரள சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் தொடக்க நாளான நேற்று அம்மாநில ஆளுநர் முகமது ஆரிப்கான் படித்ததாக பதிவு செய்யப்பட்டிருக்கும் உரையில்,‘‘முல்லைப் பெரியாற்று அணையின் கீழ் பகுதியில் வாழும் லட்சக்கணக்கான மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நவீனகால வடிவமைப்பு மற்றும் கட்டுமானத் தரங்களுக்கு ஏற்ற வகையில் புதிய அணை கட்டுவது தான் ஒரே தீர்வு’’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. கேரள ஆளுனர் உரையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருப்பதன் நோக்கம் தமிழக அரசையும், தமிழ்நாட்டு மக்களையும் சீண்டிப் பார்க்கும் செயல் என்பதைத் தவிர வேறு எதுவுமில்லை.
கேரள சட்டப்பேரவையில் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆளுனர் உரையின் போதும், முல்லைப்பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. ஒருபுறம் முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் கேரள அரசு, இன்னொருபுறம் பல்வேறு தரப்பினரின் பெயர்களில் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரச் செய்து வருகிறது. முல்லைப்பெரியாற்று அணையின் நீர்த்தேக்க உயரத்தை 152 அடியாக உயர்த்துவதை தாமதப்படுத்த வேண்டும் என்பது தான் இதன் நோக்கமாகும்.
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான எந்த தேவையும் இப்போது எழவில்லை. ‘‘முல்லைப் பெரியாறு அணை மிகவும் வலிமையாக உள்ளது. அங்கு புதிய அணை கட்டினால் எவ்வளவு வலிமையாக இருக்குமோ, அதைவிடக் கூடுதல் வலிமையுடன் இப்போதைய அணை உள்ளது. எனவே, புதிய அணை தேவையில்லை. மாறாக அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’’ என்று 2014-ஆம் ஆண்டு அளித்தத் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்துவதற்கான பணிகளை கண்காணிப்பதற்காக உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழு, 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு குறைந்தது 5 முறையாவது அணையை ஆய்வு செய்து, அணை வலிமையாக இருப்பதாக சான்று அளித்துள்ளது. கடைசியாக கடந்த 2022&ஆம் ஆண்டு மே மாதம் ஆய்வு செய்த கண்காணிப்புக் குழு கடந்த 2023&ஆம் ஆண்டு மார்ச் மாதம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையிலும் இதை உறுதி செய்துள்ளது. அதன்பின் 10 மாதங்கள் கூட ஆகாத நிலையில், முல்லைப்பெரியாற்று அணை வலுவிழந்து விட்டதாகவும், அதற்கு மாற்றாக புதிய அணை கட்டப்பட வேண்டும் என்றும் கோருவது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்பது மட்டுமின்றி, இரு மாநில உறவுகளை சீர்குலைக்க செய்யப்படும் முயற்சியும் ஆகும்.
முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில் கடந்த 2014&ஆம் ஆண்டு இறுதித் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், முல்லைப்பெரியாறு அணை மற்றும் பேபி அணையை வலுப்படுத்தும் பணிகளை செய்த பிறகு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று கூறியிருந்தது. அதன்பின் சுமார் பத்தாண்டுகள் நிறைவடையப் போகும் நிலையில், இன்று வரை தமிழக அரசால் அதை செய்ய முடியவில்லை. அதற்குக் காரணம், பேபி அணையை வலுப்படுத்தும் பணிகளை செய்ய, அங்குள்ள மரங்கள் பெரும் தடையாக உள்ளன; அந்த மரங்களை வெட்ட அனுமதி அளிக்க கேரள அரசு மறுத்து வருவது தான். அணையின் உயரம் 152 அடியாக உயர்த்தப்பட்டால் அணையின் நீர்த்தேக்கப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத மாளிகைகள் மூழ்கி விடும். அதைத் தடுப்பதற்காகவே இது போன்ற நடவடிக்கைகளில் கேரள அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இது தொடர அனுமதிக்கக்கூடாது.
முல்லைப்பெரியாறு வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் ஓன்றில், தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தமிழகமும், கேரளமும் பேச்சு நடத்தி கருத்தொற்றுமை ஏற்படுத்தினால் புதிய அணையை கட்டிக் கொள்ளலாம் என்று கூறியிருந்தது. அதைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழக அரசை எப்படியாவது பேச்சுக்கு அழைத்து விட வேண்டும் என்றும் கேரள அரசு துடிக்கிறது. கேரள அரசின் நிலைப்பாட்டையும், கோரிக்கையையும் மத்திய அரசோ, தமிழக அரசோ ஏற்கக்கூடாது. மாறாக, பேபி அணை பகுதியில் உள்ள மரங்களை வெட்ட அனுமதித்து, அணையை வலுப்படுத்தும் பணிகளுக்கு ஒத்துழைக்கும்படி கேரள அரசுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Dr Ramadoss Condemn to Kerala Govt for Mullai periyaru dam 2024