ஆன்லைன் சூதாட்ட தடை வழக்கு! விழித்து கொள்ளுங்கள் - தமிழக அரசுக்கு அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்! - Seithipunal
Seithipunal


ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தைக் காக்க, அரசின் சார்பில் வாதிட மூத்த சட்ட வல்லுனர்களை அமர்த்த வேண்டும் என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து சூதாட்ட நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தீவிரமடைந்திருக்கிறது. இந்த வழக்கின் விசாரணையில் சூதாட்ட நிறுவனங்களின் சார்பில் இந்தியாவின் புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் அணிவகுத்து நிற்கும் நிலையில், தமிழக அரசும் அதை எதிர்கொள்ள தயாராக வேண்டும்.

தமிழ்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்டோரின் தற்கொலைகளுக்கு காரணமாக இருந்த ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு அக்டோபர் 19-ஆம் நாள் சட்டம் இயற்றப்பட்டது. அதை ஆளுனர் திருப்பி அனுப்பிவிட்ட நிலையில், கடந்த மார்ச் 23-ஆம் தேதி மீண்டும் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு ஏப்ரல் 10&ஆம் நாள் ஆளுனர் ஒப்புதல் அளித்தார். 

அதை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கங்காப்பூர்வாலா, ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வின்  முன் விசாரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக விசாரணை நடைபெற்ற நிலையில், இந்த வழக்கு வரும் 19-ஆம் நாள் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் மிகவும் நியாயமானது. இந்த வழக்கில் அனைத்து நியாயங்களும் தமிழ்நாட்டின் பக்கம் தான் உள்ளன. தங்கள் தரப்பில் நியாயமில்லை என்றாலும் கூட, ஆன்லைன்  சூதாட்ட நிறுவனங்கள் இந்தியாவின் புகழ்பெற்ற வழக்கறிஞர்களை தங்களுக்காக வாதிடுவதற்கு அமர்த்தியுள்ளன. 

உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் முகுல் ரோகத்கி, அபிஷேக் மனு சிங்வி, அரியமா சுந்தரம், சஜன் பூவய்யா ஆகியோர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு ஆதரவாக வாதிட்டிருக்கின்றனர். மூத்த வழக்கறிஞர்களான சதீஷ் பராசரன், மணி சங்கர் ஆகியோர் அடுத்தக்கட்ட விசாரணையில் சூதாட்ட நிறுவனங்களுக்காக வாதிடவிருக்கின்றனர். எதிர்தரப்பில் தலைசிறந்த வழக்கறிஞர்கள் நேர் நிற்பதால் அதை எதிர்கொள்ளும் வகையில் தமிழக அரசும் மூத்த வழக்கறிஞர்களை அமர்த்த வேண்டும்.

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படுவது இது முதல் முறையல்ல. பா.ம.க.வின் வலியுறுத்தல் காரணமாக 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதுடன், 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 26-ஆம் நாள் சட்டமும் இயற்றப்பட்டது. அதை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில், இப்போது நேர் நிற்கும் மூத்த வழக்கறிஞர்கள் அனைவரும் சூதாட்ட நிறுவனங்களுக்காக வாதிட்டனர். அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் மட்டுமே நேர் நின்றார்.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் கடந்த முறை போல நீதிமன்றத்தில் வீழ்த்தப்பட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த முறை தமிழக அரசு கடுமையான முன்னேற்பாடுகளை மேற்கொண்டது. சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் வல்லுனர் குழுவை அமைத்து, ஆன்லைன் சூதாட்டம் மக்களின் வாழ்வில் எப்படியெல்லாம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்த புள்ளிவிவரங்களைச் சேகரித்து அதனடிப்படையில் செய்யப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் தான் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதை எப்பாடுபட்டாவது தமிழக அரசு காப்பாற்றியாக வேண்டும்.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் மீண்டும் நிறைவேற்றப்பட்ட நாளில் இருந்தே, உயர்நீதிமன்றத்தில் இந்த சட்டத்தைக் காக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; தமிழக அரசின் சார்பில் வாதிட மூத்த சட்ட வல்லுனர்களை அமர்த்த வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. 

ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்காக இப்போது வாதிடும்  அனைத்து வழக்கறிஞர்களும், தமிழக அரசுக்காக வாதிடும் வழக்கறிஞர்கள் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்கள் தான். முந்தைய வழக்கின் தீர்ப்புக்கு அவர்கள் தான் காரணம் என்பதால்,  இந்த முறை அவர்கள் அனைவரையும் தமிழக அரசுக்காக வாதிடுவதற்கு அமர்த்தியிருக்கலாம். அதன் மூலம் எதிர்த்தரப்பை வலிவிழக்கச் செய்திருக்க முடியும்.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தைக் காப்பதற்கு தமிழக அரசு செய்ய வேண்டிய ஒரே செயல், ஆன்லைன் சூதாட்டம் திறமை விளையாட்டு அல்ல... அதிர்ஷ்டத்தின் விளையாட்டு தான் என்பதை நிரூபிப்பது மட்டும் தான். ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தை ஆடும் போது, அவருக்கு எதிராக மறு முனையில் ஆடுவது யார்? என்பதை ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் இதுவரை தெரிவிக்க வில்லை. 

செயற்கை நுண்ணறிவுத்திறன் (Artificial Intelligence) தொழில்நுட்பத்தில் இயங்கும் ரோபோக்கள் தான் மறுமுனையில் விளையாடுகின்றன என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஒருபுறம் மனிதனும், மறுபுறம் செயற்கை அறிவுத்திறன் தொழில்நுட்ப ரோபோவும் ஆடும் ஆட்டம் நிச்சயமாக திறமையின் அடிப்படையிலானதாக இருக்க முடியாது. இந்த உண்மையை நீதிபதிகள் உணரும் வகையில் வலியுறுத்தினாலே  ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லும் என்ற தீர்ப்பை பெற முடியும். அதற்கு சிறந்த சட்ட வல்லுனர் தேவை.

ஆன்லைன் சூதாட்டம் ஆள்கொல்லி விளையாட்டு என்பதையும் நீதிமன்றத்திற்கு நிரூபிக்க வேண்டும். 2014-ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கி, 2020&ஆம் ஆண்டு நவம்பர் வரை 60-க்கும் மேலானோர்  ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டனர். ஆனால், ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டிருந்த 2020 நவம்பர்- 2021 ஆகஸ்ட் வரையிலான 10 மாதங்களில் தமிழ்நாட்டில் ஒருவர் கூட தற்கொலை செய்து கொள்ளவில்லை. 

அதேநேரத்தில் ஆன்லைன் சூதாட்டத்  தடை சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு 2021 ஆகஸ்ட் முதல் 2023 ஏப்ரல் வரையிலான 20 மாதங்களில் 49 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த புள்ளிவிவரங்களை நீதிமன்றத்தில் வலியுறுத்தி ஆள்கொல்லி சூதாட்டம் தடை செய்யப்பட்டது சரி தான் என்பதை தமிழக அரசு நிரூபிக்க வேண்டும்.

இதற்காக, ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகள் மீண்டும் வரும் 19&ஆம் நாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்பாக, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் சிலரை தமிழக அரசின் சார்பில் வாதிடுவதற்காக அமர்த்த வேண்டும். தமிழ்நாடு மீண்டும் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறாமல் தடுத்து நிறுத்த வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Say About Online Gambling Ban case issue TNGovt


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->