கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு | அன்புமணி இராமதாஸ் இரங்கல்! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் 5 பேர் உயிரிழிப்புக்கு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரின் அந்த இரங்கல் செய்தியில், "கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பாக்கத்தை அடுத்த எர்ர அள்ளி என்ற இடத்தில் இன்று காலை சொகுசுப் பேருந்தும், இழுவை ஊர்த்தியும் மோதிக்கொண்ட விபத்தில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர் என்பதை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

தர்மபுரி மாவட்டம், மலைக்காரன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த இரு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கற்றாழை பிரிக்கும் கூலி வேலைக்காக ஆந்திர மாநிலத்திற்கு இழுவை ஊர்தியில் சென்றுகொண்டிருந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், எர்ர அள்ளி என்ற இடத்தில் சென்று கொண்டிருக்கும்போது அவ்வழியே சென்ற பேருந்து,  இழுவை  ஊர்தி மீது மோதியதில் அதில் பயணம் செய்த முத்து, வசந்தி, முனுசாமி, ஆறுமாத குழந்தை, சின்னசாமி ஆகிய ஐவரும் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

 அவர்களில் சின்னசாமி தவிர மற்ற அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் தவிர முருகன், புஷ்பா, சதீஷ் ஆகிய மூவரும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகின்றனர். காயமடைந்த மூவருக்கும் தரமான மருத்துவம் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் மூவரும் விரைவில் முழு உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக்கொள்கிறேன். 

உயிரிழந்த, காயமடைந்த அனைவரும் தர்மபுரி  மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அங்கு போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் வேலைத்தேடி ஆந்திராவுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அவ்வாறு செல்லும்போதுதான் சாலை விபத்தில் சிக்கி ஐவர் உயிரிழந்துள்ளனர். மூவர் காயமடைந்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் போதிய வேலைவாய்ப்புகள் இல்லாததும் இத்தகைய விபத்துகள் நடப்பதற்கு மறைமுக காரணம் ஆகும். எனவே தர்மபுரி மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தை திறப்பது உள்ளிட்ட வேலை வாய்ப்பு பெருக்க நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.

சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முறையே ரூபாய் 25 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு முறையே ரூபாய் 10 லட்சமும் நிதி உதவி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Mourning Krushnagiri Bus Accident


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->