மீண்டும் வேட்டைக்கு தயாரான ஆன்லைன் ரம்மி! தமிழக அரசின் நிலைப்பாடு? விளாசும் அன்புமணி இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி, 24 மணி நேரம் கூட நிறைவடையாத நிலையில், ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் மீண்டும் மக்களை வேட்டையாடத் தயாராகி விட்டன. ஆன்லைனில் ரம்மி ஆடினால், ஒரு கோடி ரூபாயுடன், ஒரு  கிலோ தங்கமும் பரிசு என்று ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் வலைவிரித்திருக்கின்றன.

ஆன்லைன் ரம்மி நிறுவனங்களின் வேட்டை வேகம் வெளிப்படையாகத் தெரியும் நிலையில், அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு, இப்போது வரை தொடங்காதது வருத்தமும், கவலையும் அளிப்பதாக, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், "தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணமான ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் பயனாக, ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டு, கடந்த ஏப்ரல்  மாதம் முதல் நடைமுறைக்கு வந்தது.

அதைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகள் முடிவுக்கு வந்த நிலையில், தமிழக அரசால் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லும்; ஆனால்,  ஆன்லைன் ரம்மிக்கு இது பொருந்தாது என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 9 ஆம் தேதி தீர்ப்பளித்தது.

தீர்ப்பு வெளியாகி 24 மணி நேரம் கூட முடிவடையாத நிலையில், தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்கள் தலைவிரித்தாடத் தொடங்கி விட்டன. அனைத்து செல்பேசி எண்களுக்கும் குறுஞ்சேதி மூலம் ‘‘ரம்மி சர்க்கிள்’’ என்ற நிறுவனம் அனுப்பியுள்ள விளம்பரத்தில், ‘‘ஆன்லைன் ரம்மி விளையாடி ரூ. 1 கோடி + ஒரு கிலோ தங்கம் வெல்லுங்கள். ரம்மி விளையாட அனைவருக்கும் ரூ.10,000 வரவேற்பு போனஸ்  வழங்கப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், நிரா கேமிங் என்ற நிறுவனமும் தங்களின் ஆன்லைன்  ரம்மி ஆட்டத்தை விளையாட வருவோருக்கு ரூ.10,000 போனஸ் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

ஆசையே அனைத்து சீரழிவுகளுக்கும் காரணம். இந்த அடிப்படையை புரிந்து கொண்டு தான் ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் கோடிக்கணக்கில் பணத்தையும், கிலோ கணக்கில் தங்கத்தையும் பரிசாக வழங்குவதாக ஆசை காட்டுகின்றன. அதன் பிறகும் தயங்கும் இளைஞர்களை இழுப்பதற்காக, சூதாட்ட நிறுவனங்களே இளைஞர்களின் கணக்கில் ரூ.10,000 வரை செலுத்தி, அதை வைத்து ஆன்லைன் ரம்மி விளையாட அழைக்கின்றன.

அதனால், ஒரு வகையான மயக்கத்திற்கு உள்ளாகும் இளைஞர்கள், ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் அளித்த பணத்தில் விளையாடலாம் என நினைத்து, விளையாடத் தொடங்கி, அந்த பணத்தையும் இழந்து, லட்சக்கணக்கில் தங்கள் பணத்தையும் இழந்து கடனாளி ஆகின்றனர். அதனால், அவர்களின் குடும்பங்கள் தெருவுக்கு வருவது, கடன் சுமையை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வது போன்றவை தான் கடந்த காலங்களில் நடந்துள்ளன. அவை மீண்டும் நடந்து விடக் கூடாது.

ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களிடமிருந்து அப்பாவி மக்களைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கும் இருக்க வேண்டும். அதனடிப்படையில், ஆன்லைன் ரம்மிக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகளைத்  தொடங்கியிருக்க வேண்டும்.

குறைந்தபட்சம், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்றாவது அறிவித்திருக்க வேண்டும். ஆனால், தமிழக சட்ட அமைச்சர்  ரகுபதி அவர்களோ, ஆன்லைன் ரம்மி தடை ரத்தை எதிர்த்து தேவைப்பட்டால் மேல்முறையீடு செய்வோம் என்று கூறியிருக்கிறார். அதன் பொருள் என்ன? தமிழக அரசின் நிலை என்ன? என்பது புரியவில்லை.

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் இரண்டாவது முறை எத்தனை போராட்டங்களுக்குப் பிறகு கொண்டு வரப்பட்டது என்பதை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள். முதலில் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை கொண்டு வர தமிழக அரசு தயாராக இல்லாத நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி எனது தலைமையில் நடத்திய தொடர் போராட்டங்களின் பயனாகத் தான் தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது.

ஆனால், அந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுனர் திருப்பி அனுப்பியது, திருப்பி அனுப்பப்பட்ட சட்டத்தை சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றியது, அதற்கு நீண்ட தாமதத்திற்குப் பிறகு ஆளுனர் ஒப்புதல் அளித்தது என ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு மிக நீண்ட வரலாறு  உள்ளது. அத்தகைய சட்டத்தின் வரம்பிலிருந்து ஆன்லைன் ரம்மி நீக்கப்பட்டு விட்டதால், அச்சட்டத்தால் யாருக்கும் பயனில்லை என்ற நிலை உருவாகி விடக் கூடாது. அதை அரசு தான் சரி செய்ய வேண்டும்.

எனவே, ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்றவை திறன் சார்ந்த விளையாட்டுகள்; அவற்றுக்கு தடை விதிக்க முடியாது என்ற சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு  உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும். மேல்முறையீட்டின் தொடக்க நிலை விசாரணையிலேயே   உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை பெற்று தமிழக மக்களை அரசு காப்பாற்ற வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Condemn to TNGovt For Online Gambling nov2023


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->