சமூகநீதிக்கே ஆபத்து! தமிழக அரசின் முடிவால் கொந்தளிக்கும் அன்புமணி இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மின்சார வாரியத்தில் களப்பணியாளர்கள், மின் கணக்கீட்டாளர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு  நிரந்தரப்பணியாளர்களை நியமிக்காமல், தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் குத்தகை முறையில் ஊழியர்களை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழக அரசின் இந்த முடிவு சமூகநீதிக்கும், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கும் எதிரானது என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில்,  "தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 58,415 பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக  உள்ளன. மின்வாரியத்தின் அடிப்படைப்பணிகளான மின்கம்பங்களை அமைத்தல், மின் கம்பிகளை பூமிக்கு அடியில் புதைத்தல், மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கிடுதல் ஆகிய பணிகளுக்கான 10,000 இடங்கள்  காலியாக உள்ள நிலையில், அவற்றை நிரந்தரமாக நிரப்புவதற்கு பதிலாக தனியார் மனிதவள நிறுவனங்கள் மூலம் குத்தகை அடிப்படையில் நியமிக்க மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிக்கை  விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பப்பட்டுள்ளது. இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மின்வாரியம் மிகக்கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருப்பதாலும், ரூ.1.50 லட்சம் கோடி கடன் இருப்பதாலும் இப்போதைய சூழலில் நிரந்தரப் பணியாளர்களை நியமிக்க முடியாது என்பது தான் மின்சார வாரியத்தின் வாதம் ஆகும். மின்வாரியத்தின் களப்பணியாளர் பணி மிகவும் பொறுப்பு வாய்ந்த, அதே நேரத்தில் மிகவும் ஆபத்தான பணி ஆகும். போதிய திறமையும், அனுபவமும் கொண்டவர்களை மட்டும் தான் இந்தப் பணியில் நியமிக்க வேண்டும்; அவர்கள் தான் அந்தப் பணியின் அனைத்து நிறை மற்றும் குறைகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும். நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, அனுபவமும், திறமையும் இல்லாதவர்களை குத்தகை முறையில் நியமித்தால் அவர்களால் களப்பணியின் பொறுப்புகளை சமாளிக்க முடியாது. அது மின் வினியோகத்தில் குளறுபடிகளும், விபத்துகளும் நடக்கவே வழிவகுக்கும்.

அதுமட்டுமின்றி, குத்தகை முறையில் பணியாளர்களை நியமிப்பது சமூகநீதிக்கு எதிரான செயலாகும்.  தனியார் நிறுவனங்கள் மூலம் குத்தகை முறையில் பணியாளர்களை பணியமர்த்தும் போது, அதில் இட ஒதுக்கீட்டு விதிகள் பின்பற்றப்படுவதில்லை. அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு என்பது சமூகமாற்றத்திற்கும், சமூக முன்னேற்றத்திற்கும் வித்திடுவதாகும். இதன் மூலமாக மட்டுமே சமூகநிலையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை முன்னேற்ற முடியும். அரசு வேலைவாய்ப்புகள் கணிசமாக குறைந்து விட்ட நிலையில், இருக்கும் குறைந்த எண்ணிக்கையிலான பணிகளையும் நிரந்தரமாக நிரப்பாமல், குத்தகை முறையில்  நிரப்புவது சமூகநீதி மீது நடத்தப்படும் கொடுந்தாக்குதல் ஆகும். இதை அனுமதிக்கவே முடியாது.

அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை முறை பணி நியமனம் என்பது பணியாளர்களின் உழைப்பைச் சுரண்டுவதற்காக கொண்டு வரப்பட்டுள்ள புதிய முறையாகும். இந்த முறையில் பணியாளர்களுக்கான ஊதியத்தை அவுட்சோர்சிங் நிறுவனம் பெற்றுக் கொள்ளும். ஆனால், அந்த ஊதியத்தை பணியாளர்களுக்கு வழங்காது; அதில் பாதிக்கும் குறைவான ஊதியம் மட்டுமே வழங்கப்படும். இந்த முறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் கொத்தடிமைகளைப் போல நடத்தப்படுவர். கடந்த ஆட்சியில் இந்த முறை அறிமுகம் செய்யப்பட்ட போது அதை பா.ம.க. கடுமையாக எதிர்த்தது. இப்போதைய திமுக ஆட்சியிலும் உழைப்பாளர்களை சுரண்டும் குத்தகை முறை பணி நியமனத்தை பா.ம.க. அனுமதிக்காது.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் குத்தகை முறையில் பணி நியமனம் செய்யப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,  அது மிகவும் ஆபத்தான பரிசோதனை என்று கண்டனம் தெரிவித்தது. ‘‘அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நிரந்தரப் பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், இப்போது குத்தகை முறையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டால், ஒரே பணிக்கு இரு வகையான பணியாளர்கள் உருவாக்கப்படுவார்கள். இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சமத்துவத்தை சிதைத்து விடும். ஒரே பணிக்கு இரு வகை பணியாளர்களை நியமித்து, இரு வகையான ஊதியத்தை வழங்குவது பாரபட்சமானது. இந்த ஆபத்தான பரிசோதனை மேலும் பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்’’ என்று உயர்நீதின்றம் எச்சரித்தது. போக்குவரத்துக் கழகங்களுக்கு ஓட்டுனர்களை நியமிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்துகள் மின்வாரியத்திற்கு களப்பணியாளர்களை நியமிப்பதற்கும் முழுமையாக பொருந்தும்.

எனவே, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு களப்பணியாளர்கள், மின்கணக்கீட்டாளர்கள் ஆகிய பணிகளுக்கு குத்தகை முறையில் பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட  வேண்டும். மின்வாரியம் மட்டுமின்றி தமிழக அரசின் அனைத்துத் துறைகள் மற்றும் அனைத்து பொதுத் துறை நிறுவனங்களுக்கும் நிரந்தர அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க அரசு முன்வர வேண்டும்"என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Condemn to TNGovt 30122023


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->