"எனக்காக ஓட்டு போட்டு கிழிச்சீங்க"- அமைச்சர் பொன்முடி பேச்சால் மீண்டும் சர்ச்சை..!!
DMK minister Ponmudi again got caught in controversy
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் வட்டம் அருங்குறிக்கை அரசு உயர்நிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் மற்றும் கட்டிடத்தை தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று திறந்து வைத்தார். அதற்காக அமைக்கப்பட்ட விழா மேடையில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது "தமிழக முதலமைச்சர் அரசு பள்ளிகளில் தரத்தினை உயர்த்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், ஆய்வகங்கள், கழிப்பறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, பள்ளி சுற்றுச்சூழல் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் அரசு பள்ளிகளை பயிலும் மாணவ மாணவிகளின் கல்வித்தரத்தை உயர்த்திட வேண்டும் என்ற நோக்கில் இல்லம் தேடிய கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம் கலைத் திருவிழா, கலை அரங்கம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அதன் அடிப்படையில் அருங்குறிக்கை அரசு உயர்நிலைப் பள்ளியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.37.23 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் திறந்து வைக்கப்பட்டுள்ளது" என அமைச்சர் பொன்முடி பேசிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது இந்த விழாவில் பங்கேற்ற பெண் ஒருவர் அருங்குறிக்கை கிராமத்தில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் பொன்முடி "இந்த கிராமத்துல எல்லாரும் எங்களுக்கு ஓட்டு போட்டு கிழிச்சிட்டிங்க" என பேசியது பொதுமக்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து சுதாரித்துக் கொண்ட அமைச்சர் பொன்முடி ஓட்டு போட்டாலும் போடாவிட்டாலும் எல்லோருக்கும் செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாக சமாளித்தார். இதனைக் கண்ட கூட்டத்தில் இருந்தவர்கள் முகம் சுழித்தனர்.
சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத அமைச்சர் பொன்முடி ஏற்கனவே பெண்கள் இலவச பேருந்தில் செல்வதை ஓசி என கூறியதால் சர்ச்சையில் சிக்கிய நிலையில் தற்போது ஓட்டு போட்டு கிழிச்சிட்டிங்க என பேசி இருப்பது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
English Summary
DMK minister Ponmudi again got caught in controversy