தருமபுரி: சட்டவிரோத கருக்கலைப்பு... இளம்பெண் மரணம் - நர்ஸ் உள்ளிட்ட மூவர் கைது!
dharmapuri pregnant woman death Abortion
தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே பூச்சூரைச் சேர்ந்த கண்ணன் மற்றும் அவரது மனைவி ரம்யா (26) எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இரண்டு பெண் குழந்தைகள் இருந்த நிலையில், ரம்யா மீண்டும் கர்ப்பமாக இருந்தார்.
இந்த கர்ப்ப காலத்தில், ரம்யா மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டார் என்று கண்ணன் தனது உறவினர்களிடம் தெரிவித்தார். ஆனால் ரம்யாவின் மரணம் சந்தேகத்துக்குரியதாக இருப்பதாக அவரது உறவினர் ஏரியூர் போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் சுரேஷ் விசாரணையில், இந்த மரணத்தின் பின்னால் வேறு காரணம் இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.
ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதால், கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை சட்டவிரோதமாக ஸ்கேன் மூலம் அறிய கண்ணன் முயன்றது தெரியவந்தது. இதற்காக சேலம் ஓமலூரை சேர்ந்த நர்ஸ் சுகன்யா மற்றும் புரோக்கர் வனிதாவுடன் திட்டமிட்டிருந்தார். ரம்யாவை தனியார் ஸ்கேன் மையத்துக்கு அழைத்து சென்றபோது, கருவில் மூன்றாவது முறையும் பெண் குழந்தை இருப்பதாக சுகன்யா தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, மூவரும் இணைந்து ரம்யாவிற்கு வீட்டிலேயே கருக்கலைப்பு செய்ய திட்டமிட்டனர். கருக்கலைப்பு செய்யும் போது ரம்யாவிற்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவசரமாக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது, கர்ப்பிணி மாடிப்படியில் விழுந்ததாக மருத்துவர்களிடம் பொய் கூறினர். முதலுதவி வழங்கப்பட்ட பிறகு, மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்படும் வழியில் ரம்யா உயிரிழந்தார் என்பது போலீஸ் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில், சட்டவிரோத கருக்கலைப்பு மற்றும் தவறான தகவல் வழங்கிய குற்றச்சாட்டில் கண்ணன், நர்ஸ் சுகன்யா, புரோக்கர் வனிதா ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு தருமபுரி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
English Summary
dharmapuri pregnant woman death Abortion