கருகும் பயிர்கள்... தவிக்கும் விவசாயிகள்...! தொடர் மின்வெட்டால் விவசாய நிலங்கள் பாதிப்பு...! - உடனே களமிறங்க அரசுக்கு பிரேமலதா அதிரடி கோரிக்கை
Crops burning Farmers suffering Agricultural lands affected by continuous power cuts Premalatha demands immediate action from government
தமிழகத்தில் தொடர் பிரச்சனையாக நிலவி வரும் மின்தடை காரணமாக விவசாயிகள் கடுமையான பொருளாதார நெருக்கடியையும் மனவேதனையையும் எதிர்கொண்டு வருவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"கடலூர் மாவட்டத்தின் விருத்தாசலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளில் அடிக்கடி ஏற்பட்டு வரும் மின்தடையால், விவசாய நிலங்களுக்கு தேவையான நீரை பாய்ச்சுவதில் பெரும் சிக்கல் உருவாகியுள்ளது.

இதன் காரணமாக சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் நீரின்றி வாடி கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பல மாதங்களாக உழைத்து வளர்த்த பயிர்கள் கண்முன்னே சேதமடைந்து வருவதால், விவசாயிகள் கடும் பொருளாதார இழப்பை சந்திப்பதோடு மட்டுமல்லாமல், மனஉளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விவசாயக் கடன் தள்ளுபடி திட்டங்கள் முழுமையாக நடைமுறைக்கு வராததால் அவர்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
ஒருபுறம் கடன் சுமை, மறுபுறம் மின்தடையால் ஏற்பட்டுள்ள பாசனப் பிரச்சினை என இரட்டை நெருக்கடியில் விவசாயிகள் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இதனால் அவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எனவே, விவசாயிகளின் நலன் மற்றும் எதிர்கால வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்விநியோகத்தை சீரமைத்து, அவர்களின் குறைகளை உடனடியாக தீர்க்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Crops burning Farmers suffering Agricultural lands affected by continuous power cuts Premalatha demands immediate action from government